இந்தியன் வங்கியுடன், அலகாபாத் வங்கி ஏப்ரல் 1-ந் தேதி முதல் இணைகிறது முதன்மை செயல் அதிகாரி தகவல்


இந்தியன் வங்கியுடன், அலகாபாத் வங்கி ஏப்ரல் 1-ந் தேதி முதல் இணைகிறது முதன்மை செயல் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 15 Jan 2020 4:15 AM IST (Updated: 15 Jan 2020 2:12 AM IST)
t-max-icont-min-icon

இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி ஏப்ரல் 1-ந் தேதி முதல் இணைகிறது என்று தஞ்சையில் நடந்த கிளை மேலாளர்கள் சந்திப்பு கூட்டத்தில் வங்கியின் முதன்மை செயல் அதிகாரி பத்மஜா சுந்துரு கூறினார்.

தஞ்சாவூர்,

கும்பகோணம், திருவாரூர் மண்டல இந்தியன் வங்கி கிளை மேலாளர்கள் பொங்கல் சந்திப்பு சிறப்பு கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. பொதுமக்களுக்கு சேவையை மேம்படுத்துவது குறித்தும், வங்கி மேலாளர்களை ஊக்குவிப்பது தொடர்பாகவும் இந்த கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு சென்னை மண்டல கள பொது மேலாளர் சந்திராரெட்டி தலைமை தாங்கினார். சென்னை அலுவலக துணை பொது மேலாளர் கணேசராமன் முன்னிலை வகித்தார்.

முதன்மை செயல் அதிகாரி பங்கேற்பு

கூட்டத்தில் இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குனரும், முதன்மை செயல் அதிகாரியுமான பத்மஜா சுந்துரு கலந்து கொண்டு, இரண்டு மண்டலங்களிலும் வழங்கப்பட்டுள்ள சேவை, கடன்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து கிளை மேலாளர்களுக்கு எடுத்துரைத்தார்.

அப்போது அவர் கூறுகையில், “இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி வருகிற ஏப்ரல் 1-ந் தேதி முதல் இணைய உள்ளது. இந்த 2 வங்கிகளும் ஒன்றாக இணைந்து இணக்கமான விதிமுறைகள், நடைமுறைகளை உருவாக்கி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களின் சேவை தரம் உயர்த்தப்பட்டு இன்னும் மேம்படுத்தப்படும்” என்றார்.

இதில் மண்டல மேலாளர்கள் விஜயகுமார்(கும்பகோணம்), ராஜாமணி(திருவாரூர்), துணை மண்டல மேலாளர்கள் மோகன், செல்வநாயகம் மற்றும் வங்கி கிளை முதன்மை மேலாளர்கள், மேலாளர்கள், மாவட்ட அலுவலக ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story