தளி அருகே இரு தரப்பினர் மோதல்: வாலிபர் அடித்துக் கொலை 4 பேர் கைது


தளி அருகே இரு தரப்பினர் மோதல்: வாலிபர் அடித்துக் கொலை 4 பேர் கைது
x
தினத்தந்தி 17 Jan 2020 3:45 AM IST (Updated: 17 Jan 2020 1:50 AM IST)
t-max-icont-min-icon

தளி அருகே இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள தேவர்பெட்டா கிராமத்தை சேர்ந்தவர் சவுடப்பா. இவரது மகன் திம்மராயப்பா (வயது 22). தொழிலாளி. நேற்று முன்தினம் திம்மராயப்பாவும், அவரது நண்பர் பிரவீன்குமார் என்பவரும் ஒட்டர்பாளையம் கிராமத்திற்கு மோட்டார்சைக்கிளில் சென்றனர். அவர்கள் மோட்டார்சைக்கிளில் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து ஒட்டர்பாளையத்தை சேர்ந்த லோகேஷ் (39) என்பவர் தட்டிக் கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த லோகேஷ் மற்றும் அவருடன் இருந்தவர்கள் திம்மராயப்பாவை தாக்கினார்கள்.

அடித்துக் கொலை

இதையடுத்து திம்மராயப்பா தனது கிராமத்திற்கு சென்று நடந்த சம்பவம் குறித்து நண்பர்களிடம் கூறினார். பின்னர் திம்மராயப்பா மற்றும் அவரது நண்பர்கள் ஒட்டர்பாளையம் கிராமத்திற்கு சென்று லோகேஷ் தரப்பினரிடம் தட்டிக்கேட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

திம்மராயப்பாவுடன் வந்த சதீஷ் என்பவர் தான் வைத்திருந்த பீர் பாட்டிலால் லோகேஷ் தரப்பை சேர்ந்த கோவிந்தப்பா (47) என்பவரின் தலையில் தாக்கினார். இதை பார்த்து ஆத்திரம் அடைந்த லோகேஷ் தரப்பினர் கீழே கிடந்த கட்டையால் திம்மராயப்பாவை சரமாரியாக தாக்கினார்கள். இதில் திம்மராயப்பாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

கைது

இந்த கொலை குறித்து தகவல் அறிந்த தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் சம்பவ இடத்திற்கு சென்று கொலையான திம்மராயப்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இது தொடர்பாக கொலையுண்ட திம்மராயப்பாவின் சகோதரர் சசிக்குமார் தளி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒட்டர்பாளையத்தை சேர்ந்த பைரப்பா (40), லோகேஷ் (39), வேணு (24), கோவிந்தப்பா (47) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

இதே போல கோவிந்தப்பாவின் மனைவி ராஜம்மா தளி போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதன் பேரில் சதீஷ்குமார், அமரேஷ் (29), சசிகுமார் (24), ராஜேஷ் (24) உள்பட மொத்தம் 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில் சசிகுமார், ராஜேஷ் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 9 பேர் மீதும், சட்ட விரோதமாக கூடுதல், கலகம் விளைவித்தல், தாக்குதல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story