ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்கான நிதியுதவி பெற கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம்


ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்கான நிதியுதவி பெற கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 25 Jan 2020 10:30 PM GMT (Updated: 25 Jan 2020 2:50 PM GMT)

கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்கான நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை,

தமிழ்நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர்கள் 2019-20-ம் ஆண்டின் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் கிறிஸ்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ், அனைத்து பிரிவினர்களை உள்ளடக்கிய 600 கிறிஸ்தவர்கள், இதில் 50 கன்னியாஸ்திரிகள், அருட்சகோதரிகள் புனித பயணம் மேற்கொள்ள அனுமதித்தும் அரசால் ஆணையிடப்பட்டு உள்ளது.

இப்புனித பயணம் இஸ்ரேல், எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். இத்திட்டத்திற்கான நிபந்தனைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வருகிற பிப்ரவரி மாதம் 28-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

எனவே புனித பயணம் செல்ல விருப்பம் உள்ள கிறிஸ்தவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் ‘கிறிஸ்தவர்களின் ஜெருசலேம் புனித பயணத்திற்கான நிதியுதவி கோரும் விண்ணப்பம் 2019-20” என்று குறிப்பிட்டு இயக்குனர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரியக் கட்டிடம், முதல்தளம், சேப்பாக்கம், சென்னை 600 005 என்ற முகவரிக்கு வருகிற பிப்ரவரி மாதம் 28-ந் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் முதல் தளத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் சென்னையில் உள்ள சிறுபான்மையினர் நல இயக்குனரகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story