பொருளோ, பணமோ எதிர்பாராமல் வாக்களிக்க வேண்டும் - கலெக்டர் திவ்யதர்ஷினி பேச்சு
பொருளோ, பணமோ எதிர்பார்க்காமல் வாக்களிக்க வேண்டும் என்று மாணவிகளுக்கு கலெக்டர் திவ்யதர்ஷினி அறிவுரை வழங்கினார்.
வாலாஜா,
வாலாஜாவில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் தேசிய வாக்காளர் தின விழாவும், வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கமும் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கி, கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
இந்தியாவில் ஆண், பெண் வேறுபாடு இன்றி அனைவருக்கும் ஓட்டுரிமை உண்டு. நாம் இந்தியாவில் இருப்பது பெருமைக்குரியது. நம் நாட்டில் தான் வாக்குப்பதிவு எந்திரம் மூலமாக நடைபெறுகிறது. தேர்தல் ஆணையத்தால் பாரபட்சமின்றி தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. 18 வயது பூர்த்தியாகும் அனைவருக்கும் ஓட்டுரிமை உண்டு என்ற விதியை தேர்தல் ஆணையம் கடைபிடிக்கிறது.
நான் எனக்கு 18 வயது பூர்த்தி அடைந்ததில் இருந்து ஒரு தேர்தலில் கூட விடுபடாமல் தொடர்ந்து அனைத்து தேர்தலிலும் வாக்களித்து வருகிறேன். நீங்களும் ஒரு தேர்தலில் கூட விடுபடாமல் அனைத்து தேர்தலிலும் வாக்களிக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்த வேட்பாளரை தேர்ந்தெடுத்து வாக்களிக்க வேண்டும். எந்த ஒரு பொருளோ, பணமோ எதிர்பார்க்காமல் வாக்களிக்க வேண்டும். ஜனநாயகத்திற்கு வாக்களிப்போம் என்ற வகையில் மாணவிகளாகிய நீங்களும் நல்லாட்சி கொண்டு வருவதற்காக வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத் முன்னிலை வகித்தார். வாலாஜா அரசினர் மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் பரமேஸ்வரி வரவேற்றார்.
பின்னர் மாணவிகளுக்கான கோலம் போட்டி, ஓவியம் வரைதல், கவிதை, நடனம் ஆகிய போட்டிகளும், தேர்தலில் வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு நாடகமும் நடைபெற்றது. விழாவில் கலெக்டர் திவ்யதர்ஷினி, மூத்த வாக்காளர்களுக்கு பொன்னாடை அணிவித்தும், இளம் வாக்காளர்களுக்கு பூச்செண்டும் கொடுத்தார்.
தேசிய வாக்காளர் தினத்தையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசும், சான்றிதழ்களையும் கலெக்டர் திவ்யதர்ஷினி வழங்கினார். இதில் பல்வேறு கல்லூரிகளின் மாணவிகள், வாலாஜா தாசில்தார் பாலாஜி, தேர்தல் தனி தாசில்தார் விஜயகுமார், துணை தாசில்தார் ஜெயப்பிரகாஷ் மற்றும் வாலாஜா அரசினர் மகளிர் கலைக்கல்லூரி பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story