அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தல்


அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 3 Feb 2020 11:00 PM GMT (Updated: 3 Feb 2020 8:44 PM GMT)

அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று முதன் முதலில் நடந்த மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

சேலம்,

சேலம் மாவட்ட ஊராட்சிக்குழுவின் முதல் அறிமுக கூட்டம் அதன் தலைவர் ரேவதி தலைமையில் நேற்று நடந்தது. துணைத்தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். இதில், அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க.வை சேர்ந்த புதிய மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஊராட்சி செயலாளர் விஜயகுமாரி பேசியதாவது:-

சேலம் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் தங்களது பகுதிகளில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை பற்றி பேசலாம். மேலும், முக்கிய பணிகளை நிறைவேற்றுவது சம்பந்தமாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றால் 10 நாட்களுக்கு முன்னதாகவே எழுத்து பூர்வமாக எழுதி அதன் விவரத்தை தலைவரிடம் தெரிவிக்க வேண்டும். அதை அவர் பரிசீலனை செய்து நடவடிக்கை மேற்கொள்வார்.

முழு ஒத்துழைப்பு

மாவட்ட ஊராட்சிக் குழுவை பொறுத்தவரையில் சாதாரண கூட்டம், வேண்டுகோள் கூட்டம், அவசரகால கூட்டம் என மூன்று கூட்டங்கள் நடத்தப்படும். உறுப்பினர்கள் கேள்வி கேட்கும்போது சுருக்கமாகவும், தெளிவாகவும் கேட்க வேண்டும். அதற்கு தலைவர் உரிய பதில் அளிப்பார். உணவு, வேளாண்மை, சுகாதாரம், தொழிலாளர், மதுவிலக்கு, மக்கள் நலக்குழு உள்பட மொத்தம் 8 நிலைக்குழுவுக்கு தலைவர், உறுப்பினர் தேர்வு செய்யப்பட வேண்டும். மாவட்ட ஊராட்சிக்குழு சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் பற்றி வார்டு உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தப்படும். அனைவரும் 5 ஆண்டுகள் முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கட்சி பாகுபாடின்றி

இதைத்தொடர்ந்து மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் அனைவரும் தங்களை அறிமுகப்படுத்தி வரிசையாக பேசினர். அப்போது அ.தி.மு.க. உறுப்பினர்கள் பேசும்போது, குடிநீர், சாலை, சுகாதாரம், ஆழ்துளை கிணறு, கழிவுநீர் கால்வாய், பாலம் அமைத்தல் உள்பட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மேலும், மாவட்ட ஊராட்சிக்குழுவுக்கு வரப்பெறும் நிதியை கட்சி பாகுபாடின்றி அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும், சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஆரம்பிக்கப்படும் திட்டப்பணிகள் பூமிபூஜை நிகழ்ச்சிக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு முறையாக அழைப்பு கொடுக்க வேண்டும், என்றனர்.

தாரமங்கலம் அ.தி.மு.க. உறுப்பினர் சின்னுசாமி பேசும்போது, தாரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சமீபத்தில் கர்ப்பிணி ஒருவர் சென்றபோது, அங்கு பணியில் இருந்த டாக்டர் உரியமுறையில் பரிசோதனை செய்யவில்லை. மேலும், பணி நேரத்தில் டாக்டர்கள் இருப்பது இல்லை. 100 நாள் வேலை திட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் பணிகள் முறையாக நடப்பது கிடையாது. இதனை ஒழுங்குப்படுத்த வேண்டும், என்றார்.

முடிவில், மாவட்ட ஊராட்சி தலைவர் ரேவதி பேசும்போது, மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் சுமுகமான முறையில் நடத்த அனைத்து உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.


Next Story