விலைவாசி உயர்வை கண்டித்து மகிளா காங்கிரசார் நூதன முறையில் ஆர்ப்பாட்டம்


விலைவாசி உயர்வை கண்டித்து மகிளா காங்கிரசார் நூதன முறையில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Feb 2020 5:17 AM IST (Updated: 25 Feb 2020 5:17 AM IST)
t-max-icont-min-icon

விலைவாசி உயர்வை கண்டித்து, மகிளா காங்கிரசார் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி மாநில மகிளா காங்கிரஸ் சார்பில் சமையல் கியாஸ் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து காமராஜர் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம், விஜயவேணி எம்.எல்.ஏ. உள்பட மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதில் மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான அரசுக்கு எதிராகவும், கவர்னர் கிரண்பெடிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் சமையல் கியாஸ் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து மகிளா காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒப்பாரி வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

விலைவாசி உயர்வு

ஆர்ப்பாட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

மத்தியில் மோடி தலைமையிலான அரசு சமையல் கியாஸ் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையை படிப்படியாக உயர்த்தி வருகிறது. இதனால் அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 160 டாலராக இருந்தது. அப்போது பெட்ரோல் லிட்டருக்கு ரூ.65-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.52-க்கும் கொடுத்தோம். இன்று கச்சா எண்ணெய் ஒரு பேரல் 60 டாலர் தான். ஆனால் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசு பெட்ரோல் லிட்டருக்கு ரூ.75-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.68-க்கு விற்பனை செய்கிறது. சமையல் கியாஸ் ரூ.ஆயிரத்தை நெருங்கிவிட்டது. கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது விலைவாசியை குறைத்திருக்க வேண்டும்.

குறிப்பாக பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலையை குறைத்திருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு விலைவாசியை மேலும் அதிகரித்ததால் ஒரு வருடத்திற்கு ரூ.2 லட்சம் கோடி லாபம் கிடைக்கிறது. மோடி தலைமையிலான மத்திய அரசு விலைவாசி உயர்வை ஏற்றி மக்கள் வயிற்றில் அடிக்கிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story