தூத்துக்குடி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 6.32 லட்சம் வாக்காளர்கள் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


தூத்துக்குடி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 6.32 லட்சம் வாக்காளர்கள் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 3 March 2020 11:30 PM GMT (Updated: 3 March 2020 1:47 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 6.32 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாக, கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 6.32 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாக, கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்துள்ளார்.

ஆலோசனை கூட்டம் 

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கி பேசினார். அப்போது, அவர் கூறியதாவது;–

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள, தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகள், கோவில்பட்டி நகராட்சியில் உள்ள 36 வார்டுகள், காயல்பட்டினம் நகராட்சியில் 18 வார்டுகள் மற்றும் 19 பேரூராட்சிகளில் உள்ள 294 வார்டுகள் ஆக மொத்தம் 408 வார்டுகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்காக அந்த பகுதிகளில் 721 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் 6 லட்சத்து 32 ஆயிரத்து 479 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளவாறு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது.

அடிப்படை வசதிகள் 

மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் படி, 1,350 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் பிரிக்கப்படும். அதே போன்று, வாக்குச்சாவடி மையங்களில் தேவையான அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வாக்குச்சாவடி மையங்கள் தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனை இருந்தாலோ, அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது தொடர்பாக கருத்துக்கள் இருந்தாலோ அரசியல் கட்சியினர் மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் தொடர்பாக விரைவில் கூட்டம் நடத்தப்படும். வாக்காளர் பட்டியலில் ஏதேனும் பகுதி விடுபட்டோ, கூடுதலாக சேர்க்கப்பட்டு பிரிக்கப்பட்டிருந்தால் அது குறித்து தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள் 

கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன், உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சந்திரசேகர் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Next Story