முஸ்லிம் பெண்களின் போராட்டம் நீடிப்பு: உதவி கலெக்டர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை


முஸ்லிம் பெண்களின் போராட்டம் நீடிப்பு: உதவி கலெக்டர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 7 March 2020 5:50 AM IST (Updated: 7 March 2020 5:50 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் முஸ்லிம் பெண்களின் போராட்டம் நீடித்து வரும் நிலையில் சேலத்தில் உதவி கலெக்டர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.

சேலம்,

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றக்கோரி சேலம் கோட்டை பகுதியில் முஸ்லிம் பெண்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 19-வது நாளாக அவர்களின் போராட்டம் நீடித்தது.

இந்த போராட்டத்தை கைவிடுவது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை சேலம் உதவி கலெக்டர் மாறன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், போலீஸ் உதவி கமி‌‌ஷனர் ஈஸ்வரன், தாசில்தார் கோபாலகிரு‌‌ஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். முஸ்லிம் கூட்டமைப்பு சார்பில் முத்தவல்லி அன்வர், முன்னாள் முத்தவல்லி நாசர்கான், ஷேக் முகமது, இப்ராஹிம், மூசா, நிசார் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உதவி கமி‌‌ஷனர் ஈஸ்வரன் பேசுகையில், போராட்டம் நடக்கும் இடத்தின் பின்பகுதியில் அரசு பள்ளி உள்ளது. தற்போது அரசு பொதுத்தேர்வுகள் தொடங்கியுள்ளதால் மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

மேலும், பொதுமக்கள் அவ்வழியாக நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, போராட்டதை கைவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு இல்லாதவாறு கலைந்து செல்ல வேண்டும், என்றார்.

இதற்கு பதில் அளித்து முத்தவல்லி அன்வர் பேசும்போது, எங்களின் வாழ்வாதாரத்தை காப்பதற்காக இந்த போராட்டத்தை அமைதியான முறையில் நடத்தி வருகிறோம். கடந்த 19 நாட்களாக யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. எங்களுக்கு காவல்துறையினர் ஒத்துழைப்பு தருகின்றனர். காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மைக் எதுவும் பயன்படுத்துவது இல்லை. அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது, என்றார்.

முன்னாள் முத்தவல்லி நாசகர்கான் பேசுகையில், முஸ்லிம்களுக்கு எதிரான இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். எங்கள் கோரிக்கையை முதல்-அமைச்சருக்கு தெரிவித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். எங்களது போராட்டத்தால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை, என்றார்.

போராட்டம் என்ற பெயரில் எந்த விதமான பிரச்சினையோ? பொதுமக்களுக்கு இடையூறோ? இருக்க கூடாது என்று உதவி கமி‌‌ஷனர் ஈஸ்வரன் தெரிவித்தார். முடிவில், உதவி கலெக்டர் மாறன் கூறும்போது, நீங்கள் கூறிய கருத்தை கலெக்டர் மூலமாக அரசுக்கு தெரிவிப்போம், என்றார்.

இதனால் சேலம் கோட்டை பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முஸ்லிம் பெண்களின் போராட்டம் தொடர்ந்து நீடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Next Story