குடியுரிமை திருத்த சட்டம் அனைத்து மக்களுக்கும் எதிரானது சீமான் பேச்சு


குடியுரிமை திருத்த சட்டம் அனைத்து மக்களுக்கும் எதிரானது சீமான் பேச்சு
x
தினத்தந்தி 9 March 2020 12:30 AM GMT (Updated: 8 March 2020 7:46 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டம் அனைத்து மக்களுக்கும் எதிரானது என திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

திருச்சி,

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக திருச்சி தென்னூர் உழவர்சந்தை மைதானத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக முஸ்லிம்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் தென்னூர் உழவர்சந்தை மைதான திடலுக்கு நேற்று மாலை வந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-

இந்தியாவில் 11 மாநிலங்களில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்கள். இந்த சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரானது கிடையாது. அனைத்து மக்களுக்கும் எதிரானது. இந்தியாவில் தற்போது படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடையாது. நாட்டில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை திசை திருப்பவே குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள்.

சென்னையில் பேரணி

இனிமேல் இந்தியாவுக்குள் வருபவர்களை வேண்டுமானால் தடுக்க நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் ஏற்கனவே வந்து கால்நூற்றாண்டுக்கும் மேலாக இங்கேயே வாழ்ந்து வருபவர்களிடம் ஆதாரத்தை கேட்பது தேவையற்றது. இந்த குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்தால் ரஜினியும் முகாமிற்கு தான் செல்ல வேண்டும். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக வரும் 21-ந் தேதி சென்னையில் நடைபெறும் பேரணிக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story