ஈரோட்டில் பரபரப்பு: டிரான்ஸ்பார்மரில் கியாஸ் சிலிண்டர் லாரி மோதியது


ஈரோட்டில் பரபரப்பு: டிரான்ஸ்பார்மரில் கியாஸ் சிலிண்டர் லாரி மோதியது
x
தினத்தந்தி 14 March 2020 2:45 AM IST (Updated: 14 March 2020 12:19 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் டிரான்ஸ்பார்மரில் கியாஸ் சிலிண்டர் லாரி மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

ஈரோடு, 

பெருந்துறையில் சிப்காட் தொழில்பேட்டை உள்ளது. இங்கு சமையல் கியாஸ் நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் இருந்து ஈரோடு, நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சமையல் கியாஸ் சிலிண்டர்கள் லாரி மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த சிலிண்டர்கள் சம்பந்தப்பட்ட கியாஸ் ஏஜென்சி அலுவலக குடோன்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் வீடுகள், கடைகளுக்கு வினியோகம் செய்யப்படும்.

தினசரி நூற்றுக்கணக்கான லாரிகள் கியாஸ் சிலிண்டர்கள் ஏற்றி சென்று வருகின்றன. அதன்படி நேற்று காலை பெருந்துறையில் இருந்து நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள கியாஸ் சிலிண்டர் குடோனுக்கு ஒரு லாரி புறப்பட்டது. லாரியை டிரைவர் பழனிச்சாமி (வயது 35) என்பவர் ஓட்டி வந்தார். லாரியில் வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படும் கியாஸ் சிலிண்டர்கள் 315 மற்றும் கடைகளுக்கு பயன்படுத்தும் சிலிண்டர்கள் 24 என மொத்தம் 339 கியாஸ் சிலிண்டர்கள் இருந்தன.

நேற்று காலை 6.30 மணிக்கு ஈரோடு பெருந்துறை ரோடு குமலன் குட்டை பகுதியை கடந்து லாரி வந்து கொண்டிருந்தது. திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி ஆசிரியர்காலனி பஸ் நிறுத்தம் பகுதியில் சாலையோரத்தில் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் (மின்மாற்றி) மீது பயங்கரமாக மோதியது. கணநேரத்தில் டிரான்ஸ்பார்மர் உடைந்து உள்ளே இருந்த ஆயில் ரோட்டில் கொட்டி ஆறாக ஓடியது. லாரியின் டீசல் டேங்கில் விரிசல் ஏற்பட்டு டீசலும் வெளியில் கசிந்தது. அதே நேரம் பயங்கர சத்தத்துடன் மின்சாரம் தடைப்பட்டது. அந்த பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. லாரி மோதிய வேகத்தில் அங்குள்ள ஆட்டோ நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த ஆட்டோக்கள் மீதும் மோதியது. 

இதில் ஆட்டோவில் படுத்து இருந்த டிரைவர் ஆறுமுகம் (45) என்பவருக்கு காயம் ஏற்பட்டது. அந்த ஆட்டோ சேதம் அடைந்தது. இதுபோல் லாரியை ஓட்டி வந்த பழனிச்சாமியும் படுகாயம் அடைந்தார். சண்முகம் (52) என்பவரின் ஆட்டோவும் சேதம் அடைந்தது. லாரியை சுற்றி மின்சார கம்பிகள் சிலந்தி வலைபோன்று சுற்றிக்கிடந்தது. ஒரு பக்கம் டிரான்பார்மர் ஆயிலும், லாரியின் இருந்து டீசலும் கசிந்து ஓட, லாரியின் அடியில் 2 ஆட்டோக்கள் சிக்கிக்கிடந்ததை பார்க்கும்போது போர்க்கள காட்சி போல இருந்தது. அந்த பகுதியாக வந்தவர்கள் விபத்தைப்பார்த்ததும் அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடினார்கள். சிறிது நேரம் எந்த அசம்பாவிதங்களும் இல்லை என்று தெரிந்த பிறகே அருகில் வந்தனர். இதுபற்றி ஈரோடு தீயணைப்பு நிலையம், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த முதற்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். இதற்கிடையே 108 ஆம்புலன்சு மூலம் லாரி டிரைவர் பழனிச்சாமி, ஆட்டோ டிரைவர் ஆறுமுகம் ஆகியோர் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்து காலை நேரத்தில் நடந்ததால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த சூரம்பட்டி போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போக்குவரத்தை சீரமைத்தனர். சாலையில் ஓடிய ஆயிலை சிலர் கேன்களில் பிடித்துச்சென்றனர். ஆயில் பிடிக்க பொதுமக்கள் குவிந்தால் விபரீதம் ஏற்பட்டு விடும் என்பதால், தீயணைப்பு படையினர் ஆயில் மீது தீத்தடுப்பு பொருட்களை அடித்தும், மண்போட்டும் மூடினர். இதுபோல் லாரி மற்றும் அதில் இருந்த கியாஸ் சிலிண்டர்களில் தீத்தடுப்பு திரவங்களை பீய்ச்சி அடித்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த கியாஸ் ஏஜென்சி உரிமையாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வேறு டெம்போக்களில் கியாஸ் சிலிண்டர்களை ஏற்றினார்கள். லாரி முற்றிலும் டிரான்ஸ்பார்மர் இருந்த மின்கம்பங்களுக்குள் சிக்கி நின்றது. எனவே கிரேன் கொண்டு வரப்பட்டு லாரியை மீட்கும் பணி நடந்தது. லாரியை மீட்பதற்காக டிரான்ஸ்பார்மர் பொருத்தப்பட்டு இருந்த கம்பங்கள் முற்றிலும் அங்கிருந்து அகற்றப்பட்டன. இந்த பணிகள் நடந்ததால் நேற்று பிற்பகல் 3 மணி வரை பெருந்துறை ரோட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருந்தது.

விபத்து நடந்த இடம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு மிக அருகில் உள்ளது. ஆசிரியர் காலனி, புதிய ஆசிரியர் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பஸ் நிலையம், பன்னீர்செல்வம் பூங்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் ஏராளமானவர்கள் பஸ்சுக்காக காத்து நிற்கும் இடமாகும்.

காலை நேரம் என்பதால் யாரும் அந்த இடத்தில் இல்லை. கியாஸ் சிலிண்டர் லாரி டிரான்ஸ்பார்மரில் மோதிய வேகத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டது. இதனால் அதிர்ஷ்டவசமாக மிகப்பெரிய சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் ஈரோட்டில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story