அமைச்சர் நமச்சிவாயத்துக்கு அழைப்பு: பொதுப்பணித்துறை திட்ட பணிகள் குறித்து கள ஆய்வு கவர்னர் தகவல்


அமைச்சர் நமச்சிவாயத்துக்கு அழைப்பு: பொதுப்பணித்துறை திட்ட பணிகள் குறித்து கள ஆய்வு கவர்னர் தகவல்
x
தினத்தந்தி 16 March 2020 12:27 AM GMT (Updated: 16 March 2020 12:27 AM GMT)

பொதுப்பணித்துறையின் திட்ட பணிகள் குறித்து அடுத்த வாரம் முதல் கள ஆய்வு மேற்கொள்ளப்படும். அப்போது அமைச்சர் நமச்சிவாயத்துக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று கவர்னர் கிரண்பெடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் அரசுக்கும், கவர்னர் கிரண்பெடிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதில் யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பாக லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தான் அதிகாரம் என்று தீ்ர்ப்பு வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து கவர்னர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதிகள் ஏ.பி.சாஹி, சுப்பிரமணியன் ஆகியோர் விசாரணை நடத்தி புதுவை முதல்-அமைச்சரும், கவர்னரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். ஒருவரை ஒருவர் பொது இடங்களில் விமர்சித்துக்கொண்டால் ஜனநாயக அமைப்பின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை சீர் குலைந்து விடும் என்று தீர்ப்பளித்தார்.

பொதுப்பணித்துறை

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொடர்பாக கவர்னர் கிரண்பெடி அதிகாரிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவுக்கு அழைப்பு விடுக்கவில்லை. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் கவர்னர் கிரண்பெடி அடுத்த வாரம் பொதுப்பணித்துறையில் களஆய்வு மேற்கொள்ள இருப்பதாகவும், அப்போது அமைச்சர் நமச்சிவாயத்திற்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இது குறித்து கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

கள ஆய்வு தொடர்ந்து நடைபெறும்

புதுவை மாநிலத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கள ஆய்வு மேற்ெகாண்டு வருகிறேன். இந்த கள ஆய்வு தொடர்ந்து நடைபெறும். பொதுப்பணித்துறையில் நடக்கும் மிகப்பெரிய திட்டத்தை ஆய்வு செய்வோம். இந்த ஆய்வு தொடர்பாக 2 நாட்களுக்கு முன்பாகவே தெரிவிக்கப்படும். திட்ட மேலாளர் அந்த திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து தெரிவிக்க வேண்டும்.

இந்த ஆய்வின் போது ஒப்பந்ததாரர் அங்கு இருக்க வேண்டும். தற்போது நகர்புற வாய்க்கால் சுத்தம் செய்யும் பணி தினசரி அடிப்படையில் தனியாரிடம் தரும் எண்ணமும் உள்ளது. வரும் வாரத்தில் இருந்து சனிக்கிழமை காலையில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

ஒருங்கிணைந்து செயல்பட...

ஆய்வு செய்யக்கூடிய இடம் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அறிவிக்கப்படும். கவர்னர் மாளிகை குழுவினருடன் வர பொதுப்பணித்துறை அமைச்சருக்கும் அழைப்பு விடுப்போம். கடைசி முைற நடந்த ஆய்வுக்கு அவர் வருகை தந்திருந்தார். இந்த அழைப்பை ஒவ்வொரு வாரமும் செய்வோம். அமைச்சரின் பங்களிப்பு அனைத்து விஷயங்களிலும் சீரமைப்பை கொண்டு வர உதவும்.

வேலையை விரைவுபடுத்துங்கள். நேரடி ஆய்வின் நோக்கம் அனைத்து பணிகளையும் முன்னேற்றத்துடன் மேம்படுத்தி தக்க வைப்பதே ஆகும். அத்துடன் பணிகளை தாமதமின்றி நிறைவு செய்ய ஒருங்கிணைந்து செயல்பட முடியும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story