காய்கறி மார்க்கெட்டுகளில் கூட்டம் அலைமோதியது; வத்திராயிருப்பில் கடைகளில் கூட்டம் திரண்டிருந்தது.


காய்கறி மார்க்கெட்டுகளில் கூட்டம் அலைமோதியது; வத்திராயிருப்பில் கடைகளில் கூட்டம் திரண்டிருந்தது.
x
தினத்தந்தி 24 March 2020 8:45 PM GMT (Updated: 24 March 2020 7:52 PM GMT)

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் காய்கறி வாங்கவும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும் கடைகளில் கூட்டம் அலைமோதியது.

வத்திராயிருப்பு,

கொரோனா முன் எச்சரிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் விருதுநகரில் கடை வீதி மற்றும் முக்கிய இடங்களில் உள்ள கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இதையடுத்து வத்திராயிருப்பு மகாராஜபுரம், தம்பிபட்டி, கான்சாபுரம், கோட்டையூர், இலந்தைகுளம், கூமாப்பட்டி, சுந்தரபாண்டியம், மேலகோபாலபுரம், எஸ்.ராமச்சந்திராபுரம், வ.புதுப்பட்டி மற்றும் வத்திராயிருப்பு சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகை சரக்குகள், பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க நேற்று காலை முதலே வத்திராயிருப்பில் குவிய தொடங்கினர். இதனால் பஜார் பகுதிகள் கடைவீதி பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது.

சிவகாசி நகராட்சிக்கு சொந்தமான அண்ணா காய்கறி மார்க்கெட்டில் 150-க்கும் அதிகமான கடைகள் உள்ளது. ஒட்டன்சத்திரம், மதுரை ஆகிய ஊர்களில் மொத்தமாக காய்கறிகளை வாங்கி வந்து இங்கு விற்பனை செய்து வந்தனர். சிவகாசி நகரம், திருத்தங்கல் நகரம் மற்றும் சிவகாசி ஊராட்சிக்கு உட்பட்ட பல கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் இங்கு தான் காய்கறிகளை வாங்கி செல்வது வழக்கம். வழக்கமாகவே இந்த மார்க்கெட்டில் கூட்டம் அலை மோதும்.

தடை உத்தரவினை தொடர்ந்து நேற்று காலையில் ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காய்கறி வாங்க குவிந்தனர். ஒருவாரத்திற்கு தங்களுக்கு தேவையான காய்கறிகளை மொத்தமாக வாங்கினர். மார்க்கெட்டின் முன் பகுதியில் வாகனங்கள் அதிகஅளவில் நிறுத்தப்பட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதித்தது. இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த சிலர் சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் 3 போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டு போக்குவரத்து நெரிசல் சரி செய்யப்பட்டது.

Next Story