கொரோனாவுக்கு பலியான துணி கடைக்காரர் பற்றிய புதிய தகவல் - டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்


கொரோனாவுக்கு பலியான துணி கடைக்காரர் பற்றிய புதிய தகவல் - டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்
x
தினத்தந்தி 4 April 2020 11:07 PM GMT (Updated: 4 April 2020 11:07 PM GMT)

கொரோனாவுக்கு பலியான தாராவி துணிக்கடைக்காரர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர் என்று தெரியவந்துள்ளது.

மும்பை, 

மும்பை தாராவி பாலிகா நகரை சேர்ந்த 56 வயது துணிக்கடைக்காரா் கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனாவுக்கு பலியானார். இதையடுத்து மாநகராட்சி அவர் வசித்து வந்த கட்டிடத்துக்கு சீல் வைத்து அங்குள்ள வீட்டில் வசித்து வருபவர்களை தனிமைப்படுத்தி உள்ளது.

மேலும் துணிக்கடைக்காரருக்கு முதலில் சிகிச்சை அளித்த தாராவி டாக்டர், கிளினிக் ஊழியர்கள் 2 பேர் மற்றும் குடும்பத்தினர் என 15 பேரின் ரத்த மாதிரி கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த முடிவுகள் இன்னும் வரவில்லை.

இந்தநிலையில் துணிக்கடைக்காரருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது துணிக்கடைக்காரர் தாராவியில் காலியாக உள்ள தனது வீட்டில் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட ஜமாத்தை சேர்ந்த 5 பேரின் மனைவிமார்களை தங்க வைத்து இருந்தது தெரியவந்துள்ளது. ஜமாத்தை சேர்ந்தவர்கள் அருகில் உள்ள மசூதியில் தங்கி உள்ளனர். அவர்கள் துணிக்கடைக்காரரை சந்தித்து உள்ளனர். இவர்களிடம் இருந்து துணிக்கடைக்காரருக்கு கொரோனா பரவி இருக்கலாம் என சாகுநகர் போலீசார் கூறியுள்ளர்.

இதில் துணிக்கடைக்காரருடன் தொடர்பில் இருந்தவர்கள் கடந்த மாதம் 22-ந் தேதி முதல் 24-ந் தேதி வரையிலான காலத்தில் தாராவியில் இருந்து விட்டு கேரளாவுக்கு சென்று உள்ளனர். இவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்துமாறு கேரளா போலீசாருக்கு, மும்பை போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர்.

Next Story