டெல்லி மாநாட்டில் பங்கேற்ற வாலிபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது


டெல்லி மாநாட்டில் பங்கேற்ற வாலிபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது
x
தினத்தந்தி 4 April 2020 10:00 PM GMT (Updated: 5 April 2020 3:12 AM GMT)

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற வாலிபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூர் கிழக்கு சின்ன தெருவை சேர்ந்த 29 வயதுடைய ஆண் ஒருவர் டெல்லியில் நடந்த முஸ்லிம் மாநாட்டில் கலந்து கொண்டு கடந்த 25-ந்தேதி வீடு திரும்பினார். அவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்று கருதிய மருத்துவக்குழுவினர் கடந்த 1-ந்தேதி போலீசார் உதவியுடன் அவரை ஆம்புலன்ஸ் மூலம் பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனாவுக்கான தனி வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

அவருடைய சளி, ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள நுண்ணுயிரியல் துறை ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பரிசோதனையின் முடிவு நேற்று வெளியானது. அதில் அந்த வாலிபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு மருத்துவக்குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் வி.களத்தூரில் உள்ள அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் மருத்துவக்குழுவினர் மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வாலிபர் திருச்சி ராமலிங்க நகரில் தங்கியிருந்து தேயிலை வியாபாரம் செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருடன் பழகியவர் களுக்கும் மருத்துவக்குழுவினர் பரிசோதனை மேற்கொள்ளவுள்ளனர். மேலும் அந்த வாலிபர் வீடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் பெரம்பலூர் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் வி.களத்தூர் கிராமத்திற்கு வெளியாட்கள் யாரும் உள்ளே வராத வகையிலும், வி.களத்தூரில் இருந்து பொதுமக்கள் வெளியே செல்லாத வகையிலும் போலீசார் பல்வேறு இடங்களில் தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர்.

வெளிநாடு-வெளிமாநிலங்களில் இருந்து பெரம்பலூர் மாவட்டத்திற்கு வந்துள்ள 1,835 பேரை, அவர்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் டெல்லியில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் வேறு யாரேனும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளனரா? என்றும் மருத்துவக்குழுவினர் போலீசார் உதவியுடன் தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story