ஊரடங்கு முடிந்தவுடன் தொடங்கும் மீன்பிடி தடை காலம் ரத்தாகுமா? மீனவர்கள் எதிர்பார்ப்பு


ஊரடங்கு முடிந்தவுடன் தொடங்கும் மீன்பிடி தடை காலம் ரத்தாகுமா? மீனவர்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 5 April 2020 10:54 AM IST (Updated: 5 April 2020 10:54 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு முடிந்த உடன் தொடங்கும் மீன்பிடி தடைகாலம் ரத்தாகுமா? என மீனவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

சேதுபாவாசத்திரம்,

மீன்களின் இனப்பெருக்க காலம் எனக்கூறி ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 60 நாட்கள் மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நாட்களில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாது. இந்த ஆண்டு உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசு அறிவித்த ஊரடங்கு வருகிற 14-ந் தேதி நிறைவடைய உள்ள நிலையில் மறுநாள் 15-ந் தேதி விசைப்படகு மீனவர்களுக்கான மீன்பிடி தடை காலம் தொடங்குகிறது. 21 நாள் ஊரடங்கில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஊரடங்கு முடிந்த உடன் 60 நாட்கள் தடை காலம் அமல்படுத்தப்பட்டால் இந்த ஆண்டு விசைப்படகு மீனவர்கள் தொடர்ச்சியாக 81 நாட்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. எனவே மீன்பிடி தடை காலத்தை ரத்து செய்ய வேண்டும் என மீனவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இதுகுறித்து தமிழ் மாநில மீனவர் பேரவை மாநில பொதுச்செயலாளர் தாஜூதீன், மீன்வளத்துறை அமைச்சருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

ஊரடங்கு காரணமாக மீனவர்கள் சிரமப்பட்டு வரும் நிலையில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு இந்த ஆண்டு மீன்பிடி தடை காலத்தை ரத்து செய்ய வேண்டும். ஊரடங்கையொட்டி மீனவர்களுக்கு எந்த விதமான உதவி தொகையும் அரசு அறிவிக்கவில்லை. அதேசமயம் தடை காலத்திற்கு விசைப்படகு மீனவர்களுக்கு நிவாரண உதவி தொகையை அரசு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.

தடை கால நிவாரண தொகையை குடும்ப வாரியாக வழங்காமல், ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள நபர் வாரியாக கணக்கிட்டு வழங்க வேண்டும். இல்லையெனில் குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும். அவ்வாறு வழங்க வில்லை என்றால் மீன் பிடி தடை காலத்தை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story