கொரோனா பரிசோதனை செய்த 25 பேரை கண்காணிக்க தனியார் பள்ளியில் புதிய வார்டு
கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட 25 பேரை கண்காணிக்க தனியார் பள்ளியில் புதிதாக வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
கோவை,
கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் 109 பேர் கோவை இ.எஸ்.ஐ. மற்றும் மேட்டுப்பாளையம் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை மற்றும் பரிசோதனை செய்யப்படுகிறது.
இதில் மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 34 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 32 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்று மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இருப்பினும், அவர்களை தொடர்ந்து 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
இதைத்தொடர்ந்து கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவில் தெரியவந்த கோவை பகுதிகளை சேர்ந்த 25 பேரை தனியாக வைத்து கண்காணிக்க, கோவை சிங்காநல்லூரில் உள்ள பெர்க்ஸ் பள்ளியில் புதிய வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு படுக்கை வசதிகள் செய்யப்பட்டு 25 பேர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
தனியார் பள்ளியில் 40 படுக்கை வசதிகளுடன் புதிதாக கொரோனா வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு தொற்று இல்லாத 25 பேரை தங்க வைத்து கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பலரை கண்காணிக்க வேண்டிய நிலை வந்தால் வேறு பள்ளிகளிலும் வார்டுகள் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தனியார் பள்ளியில் புதிய வார்டு அமைக்கப்பட்டு உள்ளதை தொடர்ந்து அந்த பள்ளியை சுற்றிலும், நுழைவு வாசல் பகுதியிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று நடைபெற்றது. இதுதவிர கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் உள்ள பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் தூய்மை பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story