சமூக விலகலை கடைப்பிடிக்காத 52 இறைச்சி கடைகளுக்கு ‘சீல்’ - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை


சமூக விலகலை கடைப்பிடிக்காத 52 இறைச்சி கடைகளுக்கு ‘சீல்’ - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 5 April 2020 10:38 PM GMT (Updated: 5 April 2020 10:38 PM GMT)

சமூக விலகலை கடைப்பிடிக்காத 52 இறைச்சி கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

சென்னை, 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே நடமாடுவதை தவிர்த்து அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே வரவேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் பொதுமக்கள் இதனை பொருட்படுத்தாமல் கூட்டம் கூடுவதை வாடிக்கையாக்கி வருகின்றனர்.

இந்தநிலையில் சென்னையில் உள்ள இறைச்சிக் கடைகளிலும் பொதுமக்கள் முறையாக சமூக விலகலை கடைப்பிடிக்கவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் ‘இறைச்சிக் கடைகளில் பொதுமக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்க கடை உரிமையாளர்கள் அறிவுறுத்த வேண்டும் என்றும், சமூக விலகலை கடைப்பிடிக்காத இறைச்சி கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு, அடுத்த 3 மாதங்களுக்கு திறக்க அனுமதி மறுக்கப்படும்’ என அவர் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் நேற்று மாநகராட்சி அதிகாரிகள் சென்னையில் உள்ள 15 மண்டலத்திலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதில் பொதுமக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்காத இறைச்சிக் கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். அந்தவகையில் மணலி மண்டலத்தில் 3 கடைகள், மாதவரம், அண்ணாநகர், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் தலா 2 கடைகள், தண்டையார்பேட்டையில் 6 கடைகள் ‘சீல்’ வைக்கப்பட்டன.

மேலும் ராயபுரம் மண்டலத்தில் 6 கடைகள், அம்பத்தூர், தேனாம்பேட்டை மற்றும் பெருங்குடி மண்டலத்தில் தலா ஒரு கடை, கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் மண்டலத்தில் தலா 5 கடைகள், ஆலந்தூரில் 10 கடைகள், அடையாறில் 8 கடைகள் என மொத்தம் 52 இறைச்சிக் கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

மேலும் அங்கிருந்து 425 கிலோ இறைச்சிகளை பறிமுதல் செய்தனர். இந்த கடைகள் அடுத்த 3 மாதத்துக்கு திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Next Story
  • chat