அரசு உத்தரவை மீறி திறக்கப்பட்ட இறைச்சி கடைகள் - போலீசார் எச்சரித்து மூட வைத்தனர்


அரசு உத்தரவை மீறி திறக்கப்பட்ட இறைச்சி கடைகள் - போலீசார் எச்சரித்து மூட வைத்தனர்
x
தினத்தந்தி 5 April 2020 10:30 PM GMT (Updated: 6 April 2020 3:14 AM GMT)

திருச்சியில் அரசு உத்தரவை மீறி திறக்கப்பட்ட இறைச்சி கடைகளை போலீசார் எச்சரிக்கை செய்து மூட வைத்தனர்.

திருச்சி,

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக திருச்சி மாவட்டத்தில் ஏப்ரல் 5-ந்தேதியும், மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஏப்ரல் 6-ந்தேதியும் இறைச்சி மற்றும் மீன் கடைகள் மூடப்படவேண்டும் என்று கலெக்டர் எஸ்.சிவராசு உத்தரவிட்டு இருந்தார். அதன்படி, மாநகராட்சி ஆடு மற்றும் மாடு வதைக்கூடங்கள் நேற்று மூடப்பட்டன. முக்கியமான இடங்களில் உள்ள இறைச்சி கடைகளும் மூடப்பட்டன. புத்தூர் மீன் மொத்த விற்பனை மார்க்கெட்டும், காந்திமார்க்கெட்டின் பின்புறம் உள்ள மீன் மார்க்கெட்டும் மூடப்பட்டது.

ஆனால் திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் உள்ள மீன்மார்க்கெட் காலையில் திறந்து இருந்தது. அங்குள்ள மீன் கடைகளில் ஏராளமானவர்கள் மீன் வாங்கி சென்றனர். இதேபோல் திருச்சி சுப்பிரமணியபுரம், விமான நிலைய பகுதி வயர்லஸ் சாலை ஆகிய பகுதிகளில் சில இறைச்சி கடைகள் திறந்து வைக்கப்பட்டு இருந்தன. இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து கடை உரிமையாளர்களை எச்சரிக்கை செய்து மூட வைத்தனர்.

இதுபோல், திருவெறும்பூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலையிலேயே இறைச்சிகடைகள் ஏதும் திறந்துள்ளதா? என்று திருவெறும்பூரை அடுத்த கல்லணை ரோட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால் இறைச்சி கடைகள் திறக்கப் படவில்லை. அதுபோல் திருவெறும்பூர் எழில்நகரை அடுத்த கணேஷ் நகரில் மீன்கடை செயல்பட்டது. இதுபற்றி தகவலறிந்த திருவெறும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேலன் தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று அங்கு மீன் விற்ற 2 பேரை கைது செய்தனர்.

மேலும் மண்ணச்சநல்லூர் பகுதியில் நேற்று தடையை மீறி இறைச்சி கடை வைத்திருந்த மண்ணச்சநல்லூர், திருவெள்ளறை, மூவராயன் பாளையம்நல்லான்கொட்டம் ஆகிய பகுதியைச் சேர்ந்த 5 பேரை மண்ணச்சநல்லூர் போலீசார் கைது செய்தனர்.

Next Story