கரூரில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: சின்னஆண்டாங்கோவில் தடுப்பணை வறண்டது
கரூரில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் வேளையில் சின்னஆண்டாங்கோவில் தடுப்பணை வறண்டு உள்ளது.
கரூர்,
கந்தக பூமியான கரூரில் வெயில், பனி, மழை உள்ளிட்டவற்றின் தாக்கம் எப்போதுமே சற்று கூடுதலாக இருக்கும். தற்போது கொரோனாவால் கரூர் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இந்த வேளையில் வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கு குறையாமல் இருக்கிறது. வெப்பத்தின் தாக்கம் வீடுகளுக்குள்ளும் பரவலாக இறங்குவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
கரூர் நகரின் குடிநீர் ஆதாரமாக அமராவதி ஆறு விளங்குகிறது. தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் அமராவதி ஆற்றில் நீர்வரத்து இல்லை. மாறாக அகண்ட அமராவதி வறண்டு போய் மணற்பாங்காக காட்சியளிக்கிறது. சின்னஆண்டாங்கோவில் தடுப்பணை, செட்டிப்பாளையம் அணைக்கட்டில் தேங்கியிருந்த தண்ணீரும் வெயிலுக்கு தாக்கு பிடிக்காமல் வறண்டு விட்டது. அங்கு ஆங்காங்கே குழிகளில் சிறிதளவு தேங்கி கிடக்கிற தண்ணீரில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஆர்வமுடன் மீன்களை பிடித்து செல்கின்றனர்.
ஆறு வறண்டதால் கிணறுகள், ஆழ்துளை கிணறுகளிலும் நீர்மட்டம் குறைய வாய்ப்புள்ளது. கரூர் நகரில் சில இடங்களில் லாரிகளில் குடிநீர் வாங்கி வருவதை பரவலாக பார்க்க முடிகிறது. கொரோனா பரவலை தடுக்க கை, கால், முகம் உள்ளிட்டவற்றை சுத்தமாக கழுவி ஆரோக்கியத்தை கடைபிடிப்பது அவசியம். ஆனாலும், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்திட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் கரூர் பஸ் நிலையத்தில் சில்லரை வியாபாரிகள் காய்கறிகளை கொள்முதல் செய்வதால் அங்கு குடிநீர் வைக்க வேண்டும். மேலும் அத்தியாவசிய பொருள் வாங்க மருந்து, மளிகை கடைகள், பால் விற்பனை நிலையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்து நிற்பதால் அவர்களது தாகம் தணிக்க சம்பந்தப்பட்ட கடைக்காரர்கள் குடிநீர் தயார் நிலையில் வைக்கவும் வழிவகை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Related Tags :
Next Story