பிரதமரின் வேண்டுகோளை ஏற்று குமரியில் கொரோனாவுக்கு எதிராக மக்கள் விளக்கு ஏற்றினார்கள் - மாவட்டம் முழுவதும் வெளிச்சத்தில் ஒளிர்ந்தது


பிரதமரின் வேண்டுகோளை ஏற்று குமரியில் கொரோனாவுக்கு எதிராக மக்கள் விளக்கு ஏற்றினார்கள் - மாவட்டம் முழுவதும் வெளிச்சத்தில் ஒளிர்ந்தது
x
தினத்தந்தி 5 April 2020 11:00 PM GMT (Updated: 6 April 2020 3:42 AM GMT)

பிரதமரின் வேண்டுகோளை ஏற்று குமரியில் கொரோனாவுக்கு எதிராக மக்கள் விளக்கு ஏற்றினார்கள். மாவட்டம் முழுவதும் வெளிச்சத்தில் ஒளிர்ந்தது.

நாகர்கோவில்,

உலக நாடுகளை கதிகலங்க வைத்துள்ள கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதன் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே கொரோனா பரவதை தடுக்க 21 நாட்கள் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி குமரி மாவட்டத்திலும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே 5-ந் தேதி (அதாவது நேற்று) இரவு 9 மணி 9 நிமிடங்கள் வீட்டில் உள்ள மின் விளக்குகளை அணைத்து விட்டு மக்கள் விளக்குகளை ஏற்றி ஒளிரச் செய்ய வேண்டும். அகல்விளக்கு, மெழுகுவர்த்தியில் அல்லது செல்போன், டார்ச்லைட் விளக்கையும் ஒளிர செய்யலாம் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். கொரோனாவுக்கு எதிரான போரில் பிரதமரின் வேண்டுகோளை ஏற்று நாட்டு மக்கள் இதற்கு நல்ல வரவேற்பு அளித்தனர். அதன்படி குமரி மாவட்டத்திலும் நேற்று இரவு 9 மணிக்கு வீடுகளில் மின்விளக்குகள் அணைக்கப்பட்டு, மெழுகுவர்த்தி, தீபங்கள் ஏற்றப்பட்டன. சாலைகளில் சமூக இடைவெளி விட்டு பொதுமக்கள் ஆங்காங்கே கையில் செல்போன் விளக்குகளை ஒளிரச் செய்தனர். போலீஸ் நிலையங்களிலும், தீயணைப்பு நிலையங்களிலும் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டன.

இதேபோல் நாகர்கோவிலில் முக்கிய பகுதிகளான கோட்டார், செட்டிகுளம், மீனாட்சிபுரம், வடசேரி, ஒழுகினசேரி போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளில் மின்விளக்குகளை அணைத்து, செல்போன் விளக்கை ஒளிரச்செய்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். சில தெருக்களில் மக்கள் சமூக இடைவெளி விட்டு, தங்களது வீட்டின் முன்பு தீபம், மெழுவர்த்தி ஆகியவற்றை ஒளிரச்செய்து, கொரோனா ஒழிக.., கொரோனா ஒழிக... என்று கோஷமிட்டனர். அதே சமயத்தில் சாலைகளில் இளைஞர்கள் தங்களது கார், மோட்டார் சைக்கிளின் முகப்பு விளக்குகளை ஒளிரச்செய்தும், வெடிகளை வெடித்தும் தங்களது உற்சாகம் கலந்த ஆதரவை தெரிவித்தனர்.

மேலும் சில வீடுகளின் முன்பு இந்தியாவின் வரைபடம் போல் விளக்குள் வரிசைப்படுத்தப்பட்டு இருந்ததை காணமுடிந்தது. பெரியவர்கள், சிறுவர்கள் என அனைவரும் கையில் செல்போன், மெழுவர்த்தி ஏந்தியும், வீட்டின் முன்பு மத்தாப்புகளை கொளுத்தியதையும் காணமுடிந்தது. இதேபோல் ஆரல்வாய்மொழி, தோவாளை, தக்கலை, அஞ்சுகிராமம், மார்த்தாண்டம், கொல்லங்கோடு, குளச்சல், களியக்காவிளை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் தங்களது வீடுகளில் செல்போன் விளக்கு, மெழுகுவர்த்தி ஆகியவற்றின் மூலம் விளக்குகளை ஒளிரச் செய்தனர். இதன் மூலம் விளக்குகள் வெளிச்சத்தில் குமரி மாவட்டம் ஒளிர்ந்தது.

Next Story