மருத்துவ பணியாளர்களுக்காக கிருமாம்பாக்கத்தில் கவச உடைகள் தயாரிப்பு


மருத்துவ பணியாளர்களுக்காக கிருமாம்பாக்கத்தில் கவச உடைகள் தயாரிப்பு
x
தினத்தந்தி 6 April 2020 4:54 AM GMT (Updated: 6 April 2020 4:54 AM GMT)

கொரோனா மருத்துவ பணியாளர்களுக்காக கவச உடைகள் கிருமாம்பாக்கத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

பாகூர்,

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது. குறிப்பாக சிகிச்சை அளிக்கும் டாக்டர், நர்சுகளுக்கும் நோய் தொற்று ஏற்படும் அவலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எனவே, மருத்துவ பணியாளர்கள் கவச உடை அணிந்துதான் கொரோனா நோயாளிகள் இருக்கும் அறைக்குள் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

கொரோனா தொற்று புதுச்சேரி மாநிலத்தில் தற்போது 4 பேருக்கு பரவியுள்ளது. சந்தேகத்தின் பேரில் 7 பேரை தனிமைப்படுத்தி அவர்களது ரத்தமாதிரியை சோதனைக்கு அனுப்பியுள்ளனர். தொடர்ந்து புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் சந்தேகத்துக்குரியவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிரத்யேகமாக பயன்படுத்தப்படும் கவச உடைகளுக்கு அதிக அளவில் தேவை ஏற்பட்டுள்ளது. இந்த உடைகளின் தயாரிப்பு பணியை கிருமாம்பாக்கத்தில் தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதுபோல் புதுச்சேரி கிருமாம்பாக்கத்தில் சிறுதொழில் மூலம் கொரோனா வார்டு பிரிவில் சிகிச்சை அளிக்கும் மருத்துவ குழுவினருக்கு என்று தனியாக (டிஸ்போசபல் கோட்) பாதுகாப்பான உடைகள், முககவசம், கையுறைகள் தயாரிக்கப்பட்டு புதுச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இதுபோன்று மக்களின் பாதுகாப்பு கருதி மகளிர் சுயஉதவிக்குழுக்கள், தையல் தொழிலில் ஈடுபடுபவர்கள் முககவசம் தயாரித்து குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால் முககவசம் தற்போது தட்டுப்பாடின்றி அனைத்து கடைகளிலும் கிடைத்து வருகிறது.

Next Story