அதிகாரிகள் நேரில் ஆய்வு: இறைச்சி கடைகளில் விற்பனை மந்தம் - சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தல்


அதிகாரிகள் நேரில் ஆய்வு: இறைச்சி கடைகளில் விற்பனை மந்தம் - சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 6 April 2020 5:18 AM GMT (Updated: 6 April 2020 5:18 AM GMT)

விடுமுறை நாளான நேற்று இறைச்சி கடைகளில் விற்பனை மந்தமாக இருந்தது. குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் சமூக விலகலை கடைபிடிக்குமாறு அங்கிருந்தவர்களிடம் அதிகாரிகள் வலியுறுத்தினர்.

புதுச்சேரி, 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. புதுச்சேரியிலும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கிச் செல்வதற்கு வசதியாக கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை கடைகளை திறந்து வைத்திருக்க உத்தர விடப்பட்டுள்ளது. பால் பூத்துகளுக்கும் நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். இந்தநிலையில் வில்லியனூர் சுல்தான்பேட்டை பகுதியில் ஐஸ் பெட்டியில் வைத்து இருந்த 500 கிலோ பழைய இறைச்சியை சுகாதார துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

ஞாயிற்றுக்கிழமையான நேற்றும் இறைச்சி மற்றும் மீன், கோழி கறி கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் என கருதிய சுகாதாரதுறை அதிகாரிகள் அதிரடியாக களமிறங்கினர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி இறைச்சி கடைகளில் அவ்வளவாக கூட்டம் இல்லை. விற்பனை மந்தமாகவே இருந்தது. இதனால் இறைச்சி கடை வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர். ஒரு கிலோ இறைச்சி ரூ.800-க்கு விற்கப்பட்டதால் அதை வாங்க முடியாதவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள ஏரிகளில் மீன் பிடித்துச் சென்றதை பார்க்க முடிந்தது.

நகரம் மற்றும் கிராமப்புறங்களில் குடிநீர் காலை, மாலை நேரங்களில் சரியாக வராததால் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் தண்ணீர் பிடிக்க ஏராளமானோர் காத்து கிடந்தனர். ஒவ்வொருவரும் தங்களது தண்ணீர் கேன்களை நீண்ட தூரத்திற்குவரிசையில் வைத்து காத்து நின்றனர். இதனை நேரில் கண்ட அதிகாரிகள் அவர்களிடம் சமூக விலகலை கடைபிடிக்குமாறு வலியுறுத்தினர்.

Next Story