கொரோனா தடுப்பு நடவடிக்கை: தெருக்களில் நடந்து சென்று கிருமிநாசினி தெளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ


கொரோனா தடுப்பு நடவடிக்கை: தெருக்களில் நடந்து சென்று கிருமிநாசினி தெளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ
x
தினத்தந்தி 6 April 2020 10:45 PM GMT (Updated: 6 April 2020 5:29 PM GMT)

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, அமைச்சர் கடம்பூர் ராஜூ தெருக்களில் நடந்து சென்று கிருமிநாசினி தெளித்தார்.

கோவில்பட்டி, 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கோவில்பட்டியை அடுத்த இலுப்பையூரணியில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நேற்று நடந்தது. செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கி, கிருமிநாசினி தெளிக்கும் பணியை தொடங்கி வைத்தார். 

பின்னர் அவர், தெருக்களில் நடந்து சென்று வீடுகளின் முகப்பில் கிருமிநாசினி தெளித்தார். அப்போது அப்பகுதி மக்கள், அங்குள்ள பொட்டலூரணி குளம் மற்றும் மறுகால் வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அந்த இடங்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் திருநங்கைகள் 31 பேருக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ தனது சொந்த நிதியில் இருந்து தலா ரூ.1,000 நிதி உதவி வழங்கினார். தொடர்ந்து அவர், பாண்டவர்மங்கலம் பஞ்சாயத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

பின்னர் கிழவிபட்டி பஞ்சாயத்தில் ஆதரவற்றவர்களுக்கு உணவு பொட்டலங்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார். தொடர்ந்து அவர், மந்திதோப்பு மலை அடிவாரத்தில் நரிக்குறவர் காலனியில் வசிக்கும் 40 குடும்பத்தினருக்கு தேவையான அரிசி, பருப்பு, காய்கறி, மளிகை பொருட்களை வழங்கினார். பின்னர் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஆதரவற்றவர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினார்.

அப்போது சின்னப்பன் எம்.எல்.ஏ., கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, தாசில்தார் மணிகண்டன், நகரசபை ஆணையாளர் ராஜாராம், சுகாதார அலுவலர் இளங்கோ, யூனியன் துணை தலைவர் பழனிசாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story