ஆத்தூர் அருகே ஊரடங்கில் பயங்கரம்: பிளஸ்-2 மாணவி அடித்துக்கொலை - தந்தை கைது


ஆத்தூர் அருகே ஊரடங்கில் பயங்கரம்: பிளஸ்-2 மாணவி அடித்துக்கொலை - தந்தை கைது
x
தினத்தந்தி 7 April 2020 6:00 AM IST (Updated: 6 April 2020 11:48 PM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் அருகே ஊரடங்கு நேரத்தில் பிளஸ்-2 மாணவி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய தந்தையை போலீசார் கைது செய்தனர்.

ஆறுமுகநேரி, 

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே புன்னக்காயல் 60 வீடு பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி (வயது 40), மீனவர். இவருடைய மனைவி எபிசா (38). இவர்களுக்கு 2 மகள்கள். மூத்த மகள் அந்தோணிஸ்டா (17). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ஆண்டு இறுதி பொதுத்தேர்வை எழுதினார்.

இந்த நிலையில் அந்தோணிக்கு கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டது. எனவே, அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனாலும் அவருக்கு குணமாகாததால், அவரை புளியம்பட்டி கிறிஸ்தவ ஆலயத்தில் வைத்து குடும்பத்தினர் பராமரித்து வந்தனர். அங்குள்ள மனநல மையத்திலும் சிகிச்சை அளித்தனர்.

தகராறு

இதற்கிடையே, கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து புளியம்பட்டி ஆலயத்தில் இருந்து அந்தோணியை குடும்பத்தினர் சொந்த ஊருக்கு அழைத்து வந்து, வீட்டில் வைத்து கவனித்து வந்தனர்.

அந்தோணி தனது வீட்டில் யாராவது சத்தமாக பேசினாலோ அல்லது தெருக்களில் யாரேனும் சத்தமாக பேசியபடி சென்றாலோ, அவர்களிடம் தகராறு செய்து தாக்கி வந்தார். எனவே, அவரை வீட்டில் தனி அறையில் அடைத்து வைத்து பராமரித்தனர்.

கம்பால் தாக்கினார்

நேற்று மதியம் அந்தோணிஸ்டா வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது தனது அறையில் இருந்து திடீரென்று வெளியே வந்த அந்தோணி கூச்சலிட்டவாறு மகளிடம் சென்று தகராறு செய்தார். இதையடுத்து அந்தோணிஸ்டா டி.வி.யை ஆப் செய்துவிட்டு வெளியே சென்றார்.

பின்னர் அவர் சிறிது நேரத்தில் மீண்டும் வீட்டுக்கு வந்து டி.வி.யை ஆன் செய்து பார்த்துக் கொண்டிருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்தோணி அங்கு கிடந்த கம்பை எடுத்து வந்து, அந்தோணிஸ்டாவை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அலறி துடித்தவாறு வெளியே ஓடி வந்த மகளை தொடர்ந்து அந்தோணி சரமாரியாக தாக்கினார். இதில் அந்தோணிஸ்டா ரத்த வெள்ளத்தில் வீட்டின் முன்பு சரிந்து விழுந்தார்.

சாவு

உடனே அந்தோணிஸ்டாவை அவருடைய தாயார், தங்கை மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி இரவில் அந்தோணிஸ்டா பரிதாபமாக இறந்தார்.

இந்த பயங்கர கொலை குறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்தோணியை கைது செய்தனர். ஊரடங்கு நேரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட தந்தை, பெற்ற மகளையே அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story