கடலூரில், தடையை மீறி விற்பனை: இறைச்சி, மீன் கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு - வருவாய்த்துறையினர் நடவடிக்கை
கடலூரில், தடையை மீறி விற்பனை செய்ததால், இறைச்சி, மீன் கடைகளை வருவாய்த்துறையினர் பூட்டி சீல் வைத்தனர்.
கடலூர்,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கடலூர் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே வரக்கூடாது என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர வருகிற 14-ந்தேதி வரை இறைச்சி, மீன் கடைகள், மார்க்கெட்டுகளை மூடவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த தடை உத்தரவை மீறி கடைகள் வைத்திருப்போர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து வருகின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட கடைகளையும் வருவாய்த்துறையினர் பூட்டி சீல் வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று கடலூர் செம்மண்டலத்தில் உள்ள ஒரு இறைச்சி கடையை திறந்து, அதன் உரிமையாளர் ஆட்டு இறைச்சி விற்பனை செய்வதாக புகார் வந்தது.
தகவல் அறிந்ததும் கடலூர் தாசில்தார் செல்வக்குமார், மண்டல துணை தாசில்தார் ராஜேஷ், சிறப்பு தாசில்தார் மகேஷ், வருவாய் ஆய்வாளர் ரகுநாதன் மற்றும் வருவாய்த்துறையினர், நகராட்சி அலுவலர்கள், புதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த கடையில் இறைச்சி வியாபாரம் நடைபெற்றது. இதையடுத்து அந்த கடையை வருவாய்த்துறையினர் பூட்டி சீல் வைத்தனர்.
பின்னர் இது பற்றி கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடை உரிமையாளர் முபாரக் அலியை கைது செய்தனர். இதேபோல் கடலூர் முதுநகர் ஆற்றங்கரை வீதியில் ஆறுமுகம் என்பவர் மீன் கடையை திறந்து வியாபாரம் செய்தார். இதையடுத்து அவரது கடையையும் வருவாய்த்துறையினர் பூட்டி சீல் வைத்தனர். அவர் மீதும் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story