டெல்லி மாநாடு சென்று திரும்பியவர்: செந்துறையை சேர்ந்தவருக்கு கொரோனா பாதிப்பு


டெல்லி மாநாடு சென்று திரும்பியவர்: செந்துறையை சேர்ந்தவருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 6 April 2020 10:45 PM GMT (Updated: 7 April 2020 5:20 AM GMT)

டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பிய செந்துறையை சேர்ந்தவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

செந்துறை,

அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியை சேர்ந்த 3 பேர், எருதுகாரன்பட்டியை சேர்ந்த ஒருவர், திருமானூர் பகுதியை சேர்ந்த ஒருவர் என 5 பேர், டெல்லியில் நடைபெற்ற மாநாட்டிற்கு சென்று திரும்பினர். அவர்களை கடந்த வாரம் சுகாதாரத்துறையினர் அழைத்துச்சென்று அரியலூர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர். மேலும் அவர்களுடைய சளி, ரத்தம் ஆகியவற்றை பரிசோதனைக்கு அனுப்பினர்.

இந்நிலையில் பரிசோதனை முடிவில் அவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, நேற்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஏற்கனவே சென்னை வேளச்சேரியில் இருந்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு வந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர் அரியலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பிய செந்துறையை சேர்ந்த 3 பேர் வசித்த பகுதிக்கு நேற்று காலை செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் வந்தனர். அவர்கள், கொரோனா பாதிப்பு உறுதியான நபரின் வீட்டை சுற்றி 200 மீட்டர் தொலைவிற்கு பாதுகாப்பு வளையம் அமைத்துள்ளனர்.

மேலும் வெளிநபர்கள் யாரும் உள்ளே செல்லாத வகையிலும், அப்பகுதியில் குடியிருப்பவர்கள் யாரும் வெளியே செல்லாத வகையிலும் சாலையில் இரும்பு கம்பிகளை கொண்டு தடுப்புகளை ஏற்படுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் செந்துறை- அரியலூர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது.

இதைத்தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்களை சுகாதார துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று கொரோனா தொற்று இருக்கிறதா என்று பரிசோதனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் வருவாய்த்துறையினரும் சுகாதார துறையினரும் செந்துறை பகுதியை சுற்றி 7 கி.மீ. தொலைவிற்கு உள்ள கிராமங்களின் எல்லைகளை சீல் வைப்பதற்கான இடங்களை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நடவடிக்கைகள் செந்துறை பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story