ஆத்தூர் பகுதியில், பெண்கள் உள்பட 7 பேர் தற்கொலை முயற்சி - வீட்டில் முடங்கி கிடப்பதால் விபரீத முடிவா? போலீஸ் விசாரணை


ஆத்தூர் பகுதியில், பெண்கள் உள்பட 7 பேர் தற்கொலை முயற்சி - வீட்டில் முடங்கி கிடப்பதால் விபரீத முடிவா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 6 April 2020 10:30 PM GMT (Updated: 7 April 2020 5:20 AM GMT)

ஆத்தூர் பகுதியில் 5 பெண்கள் உள்பட 7 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வீட்டில் முடங்கி கிடப்பதால் மனஉளைச்சலில் அவர்கள் இந்த விபரீத முடிவை எடுத்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆத்தூர்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். இதன் காரணமாக சிலர் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாக கூறப்படுகிறது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள காட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் அய்யனார்மலை (வயது 50). இவர் விஷ செடியை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் மணிகண்டன் (24). இவர் நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதேபோல ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி சுதா (32). இவர் எலிமருந்தை குடித்து விட்டார். உடனே அவர் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். தலைவாசல் பட்டுதுறை கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி ரேணு பிரியங்கா (28). இவர் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

தலைவாசல் பகுதியை சேர்ந்தவர் சிவசங்கரன். இவரது மனைவி தேன்மொழி (32). இவர் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு காப்பாற்றப்பட்டார். ஆத்தூர் அருகே உள்ள செந்தாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் சுகாசினி (18). இவர் பொட்டாசியம் சல்பேட் என்ற வேதிப்பொருளை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

ஆத்தூர் நரசிங்கபுரம் கலைஞர் காலனி பகுதியை சேர்ந்தவர் தேசிங்குராஜா. இவருடைய மனைவி ராஜேஸ்வரி (35). இவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இவர்கள் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆத்தூர் பகுதியில் 5 பெண்கள் உள்பட 7 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டுக்குள் முடங்கி கிடப்பதால், மன உளைச்சல் மற்றும் குடும்ப பிரச்சினையால் இவர்கள் விபரீத முடிவு எடுத்து தற்கொலைக்கு முயன்றார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story