நாகர்கோவிலில் புதிய ஏற்பாடு வடசேரி பஸ் நிலையத்தில் கிருமி நாசினி சுரங்கப்பாதை - இன்று பயன்பாட்டுக்கு வருகிறது
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் கிருமி நாசினி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இன்று பயன்பாட்டுக்கு வருகிறது.
நாகர்கோவில்,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டும் பொதுமக்கள் வெளியே அனுமதிக்கப்படுகிறார்கள். அதற்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் காய்கறி சந்தையில் கூட்டம் அதிகமாக இருந்ததால், சந்தைகளை மூட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
அதே சமயத்தில் கூட்ட நெரிசலின்றி இருப்பதற்காக நாகர்கோவில் வடசேரி பஸ்நிலையம் தற்காலிக சந்தையாக மாற்றப்பட்டு அங்கு காய்கறி விற்பனை நடந்து வருகிறது. இந்தநிலையில் காய்கறி வாங்க வரும் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் பரவி விடக்கூடாது என்பதற்காக நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் மற்றொரு தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதாவது, சுரங்க வடிவிலான கிருமிநாசினி தெளிப்பானை அறிமுகப்படுத்துகிறது. இந்த கிருமிநாசினி சுரங்கப்பாதை வழியாக தான் பொதுமக்கள் செல்ல வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்பட உள்ளது.
இந்தநிலையில் சுரங்க வடிவிலான கிருமி நாசினி தெளிப்பான் கருவி நாகர்கோவில் மாநகராட்சிக்கு வந்துள்ளது. இதற்கான செயல்முறை விளக்கம் நேற்று வடசேரி பஸ் நிலையத்தில் நடந்தது. மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் தலைமையில் இந்த செயல் விளக்கம் நடத்தப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் சுரங்கவடிவிலான கிருமிநாசினி தெளிப்பான் பயன்பாட்டுக்கு வருகிறது.
இதுதொடர்பாக தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாகர்கோவில் மாநகராட்சி மூலம் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அம்மா உணவகத்தில் நாள்தோறும் முதலில் 800 பேருக்கு உணவு வழங்கப்பட்டு வந்தது. தற்போது 2 ஆயிரம் பேருக்கு 3 வேளை உணவு வழங்கப்படுகிறது. மேலும் அவசர தேவைக்கு நாகர்கோவில் மாநகராட்சியில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. உதவிதேவைப்படுகிறவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் சேவை அளிக்கப்பட்டு வருகிறது. தன்னார்வலர்கள் 1,000 பேர் தங்கள் பெயர்களைசேவை பணிக்கு நாகர்கோவில் மாநகராட்சியில் பதிவு செய்துள்ளார்கள்.
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம், இந்து கல்லூரி அருகே உள்ள காப்பக மையம், கலெக்டர் அலுவலகம் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ஆகிய 4 இடங்களில் நாகர்கோவில் மாநகராட்சி மூலம் சுரங்க வடிவிலான கிருமி நாசினி தெளிப்பான் கருவி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
மேலும் ஆரல்வாய்மொழியில் தற்காலிகமாக காய்கறி மார்க்கெட் செயல்படும் நகர பூங்காஅருகில் எனது சொந்த நிதியிலிருந்து ரூ.70 ஆயிரம் மதிப்பில் சுரங்க வடிவிலான கிருமிநாசினி தெளிப்பான் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story