ஈரோடு தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா நிதி திரட்டுவதாக கூறி ரூ.1 லட்சம் மோசடி - 3 பேர் கைது
ஈரோடு தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா நிதி திரட்டுவதாக கூறி ரூ.1 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு,
ஈரோடு பெருந்துறைரோட்டில் பிரபல தனியார் ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. அந்த ஆஸ்பத்திரியில் நிர்வாக அதிகாரியாக ஈரோடு சென்னிமலைரோடு காந்திநகரை சேர்ந்த சதீஸ்குமார் (வயது 31) உள்ளார். அவரது செல்போனுக்கு கடந்த 13-ந் தேதி ஒரு செல்போன் எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதை ஏற்று அவர் பேசியபோது எதிர்முனையில் பேசியவர் தன்னை ஓய்வுபெற்ற நீதிபதி என்றும், கொரோனா நிவாரண உதவி வழங்குவதற்காக நிதி திரட்டுவதாகவும் தெரிவித்தார். அதற்கு சதீஸ்குமார், ஆஸ்பத்திரியின் நிர்வாக இயக்குனரிடம் கேட்டு தகவல் சொல்வதாக கூறியுள்ளார்.
அதன்பின்னர் 14-ந் தேதி மீண்டும் அதே செல்போன் எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அப்போது ஊழியர்களிடம் நிதி திரட்டி கொடுப்பதாக சதீஸ்குமார் தெரிவித்தார். மேலும், ஓய்வுபெற்ற நீதிபதி பேசுவதாக கூறியவர் வெங்கடபதி என்பவரை நேரில் அனுப்பி பணத்தை பெற்றுக்கொள்வதாகவும் தெரிவித்து உள்ளார். நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு 3 பேர் ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அதில் ஒருவர் தன்னை வெங்கடபதி என்று அறிமுகப்படுத்தி கொண்டு, ஓய்வுபெற்ற நீதிபதி அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் இருந்து திரட்டப்பட்ட ரூ.50 ஆயிரம் மற்றும் ஆஸ்பத்திரியின் நிர்வாக இயக்குனர் கொடுத்த ரூ.50 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சத்தை அவர்களிடம் சதீஸ்குமார் கொடுத்துள்ளார். மேலும், ஓய்வுபெற்ற நீதிபதியின் விவரத்தை பற்றி சதீஸ்குமார் கேட்டுள்ளார். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்கள். இதனால் சந்தேகம் அடைந்த சதீஸ்குமார் பணத்தை திரும்ப கொடுக்கும்படி கேட்டுள்ளார்.
ஆனால் அவர்கள் 3 பேரும் சதீஸ்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு, பணத்துடன் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். உடனடியாக ஆஸ்பத்திரியின் ஊழியர்கள் அவர்கள் 3 பேரையும் மடக்கிப்பிடித்தனர். இதைத்தொடர்ந்து பிடிபட்டவர்களை ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் அவர்கள் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில் அவர்கள் ஈரோடு பெரியசடையம்பாளையத்தை சேர்ந்த வெங்கடபதி (வயது 56), கோபிசெட்டிபாளையம் புதுக்கரைப்புதூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (37), கோவை கணபதி பகுதியை சேர்ந்த கிரீஸ்குமார் (46) ஆகியோர் என்பதும், இவர்கள் அனைவரும் ஈரோட்டில் உள்ள ஒரே நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும், ஓய்வுபெற்ற நீதிபதி பேசுவதாக கூறி தனியார் ஆஸ்பத்திரியில் ரூ.1 லட்சத்தை மோசடி செய்ததும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story