கொரோனா ஊரடங்கால் வருமானமின்றி சிரமப்படும் கிராம நாடக கலைஞர்கள் நிவாரணம் வழங்க கோரிக்கை


கொரோனா ஊரடங்கால் வருமானமின்றி சிரமப்படும் கிராம நாடக கலைஞர்கள் நிவாரணம் வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 4 May 2020 10:47 AM IST (Updated: 4 May 2020 10:47 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஊரடங்கு உத்தரவால் வருமானமின்றி தவிக்கும் கிராம நாடக கலைஞர்கள் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாலாஜா,

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் கோவில் திருவிழாக்களின்போது கிராம நாடக கலைஞர்கள் பலர் குழுவாக புராண மற்றும் சமூக விழிப்புணர்வு நாடகங்களை நடத்துவது வழக்கம். அதில் குறிப்பாக, தமிழ் மாதமான சித்திரை முதல் ஆவணி மாதம் வரை பல்வேறு கிராமங்களில் அதிகளவில் நாடகங்கள் நடக்கும். தொடர்ந்து நாடகங்கள் நடக்கும்போது ஒரு சில நேரத்தில் திடீரென மழை, மின் கோளாறு, வேறுசில காரணங்களால் நாடகம் நடப்பது தடைப்பட்டு விடும்.

இதனால் நாடக கலைஞர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். தற்போது பொதுமக்கள் கூடுவதற்கும், திருவிழாக்கள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் நாடகம் நடத்துவது என்ற பேச்சிக்கே இடமில்லாமல் போய் விட்டது. இதனால் நாடக கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, வருமானமின்றி குடும்பத்தை நடத்த முடியாமலும், அத்தியாவசியச் செலவுகளுக்கு பணம் இல்லாமலும் சிரமப்பட்டு வருகின்றனர்.

சலுகைகளை பெறமுடியவில்லை

வாலாஜா மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வசிக்கும் நாடக கலைஞர்கள் பலர் பெரும்பாலும் வறுமையில் வாழ்பவர்களாகத் தான் உள்ளனர். கல்வியறிவும் குறைந்தவர்கள் தான். கிராம அளவில் நாடகங்களில் நடித்து வரும் நடிகர், நடிகைகளில் பலர் கல்வியறிவில் குறைந்தவர்களாக உள்ளதால் அவர்கள் தங்களுக்கான நலத் திட்ட உதவிகளை பெறுவதற்கு விண்ணப்பிப்பது போன்ற விவரங்களை அறியாதவர்களாகத் தான் உள்ளனர். அதில் பலர் தங்களுக்கான சங்கத்தில் பதிவு செய்யாத நிலையில் உள்ளனர். ஒரு சிலர் மட்டுமே சங்கத்தில் பதிவு செய்துள்ளனர். உரிய பதிவுகள் செய்யாததால் அரசின் சலுகைகளை அவர்களால் பெற முடியவில்லை.

தற்போது கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் வேலை வாய்ப்பின்றி நாடக கலைஞர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். நாடக கலைஞர்களுக்கு வேறு தொழில்கள் தெரியாததால் வருமானத்துக்கு அல்லல்பட்டு வருகின்றனர்.

கோரிக்கை

ஊர்கள்தோறும் சென்று நாடகங்கள் மூலமாக மக்களுக்கு மகிழ்ச்சியையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வரும் நாடக கலைஞர்களின் வாழ்வு வளம் பெற மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல் கட்டமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் தாலுகா வாரியாக உள்ள நாடக கலைஞர்களின் விவரங்களை வருவாய்த்துறையினர் கணக்கெடுத்து, உரிய நிவாரணம் வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story