சொந்த ஊருக்கு செல்ல சிறப்பு ரெயில் கேட்டு வடமாநில தொழிலாளர்கள் சாலை மறியல்


சொந்த ஊருக்கு செல்ல சிறப்பு ரெயில் கேட்டு வடமாநில தொழிலாளர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 5 May 2020 10:36 PM GMT (Updated: 5 May 2020 10:36 PM GMT)

சொந்த ஊருக்கு செல்ல சிறப்பு ரெயில் கேட்டு கோவையில் வடமாநில தொழிலாளர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை,

பீகார், ஜார்கண்ட், ஒடிசா, மேற்கு வங்காளம், அசாம் உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் கோவையில் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்கள். அவர்கள், ஊரடங்கு காரணமாக உணவின்றி தவித்து வந்தனர். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் போலீசார் ஜீப்புகளில் சென்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு தினமும் உணவு வழங்கி வந்தனர்.

இந்த நிலையில் கோவை சிவானந்தா காலனி பகுதியில் உணவு வாங்குவதற்காக வடமாநில தொழிலாளர்கள் காத்திருந்தனர். அவர்களில் 50 பேர் திடீரென்று சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

அப்போது அவர்கள், தங்களை சொந்த மாநிலத்தில் உள்ள ஊருக்கு அனுப்பி வைக்க சிறப்பு ரெயில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் போலீசாரும், அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அவர்கள், வடமாநில தொழிலாளர்களிடம், வடமாநிலத்துக்கு சிறப்பு ரெயில் இயக்க மாவட்ட நிர்வாகம், ரெயில்வே துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

விரைவில் ரெயில் இயக்கப்பட உள்ளது என்று உறுதி அளித்தனர். அதை ஏற்று வடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.பின்னர் அவர்கள் உணவு வாங்கிச்சென்றனர். சாலை மறியல் போராட்டம் காரணமாக சிவானந்தா காலனி பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story