சேலம் மாவட்டத்தில் 2 நாட்களில் ரூ.20 கோடிக்கு மது விற்பனை டாஸ்மாக் மேலாளர் தகவல்


சேலம் மாவட்டத்தில் 2 நாட்களில் ரூ.20 கோடிக்கு மது விற்பனை டாஸ்மாக் மேலாளர் தகவல்
x
தினத்தந்தி 9 May 2020 4:46 AM GMT (Updated: 9 May 2020 4:46 AM GMT)

சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் ரூ.20 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றதாக டாஸ்மாக் மேலாளர் வேடியப்பன் கூறினார்.

சேலம்,

சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் 168 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. இங்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மது விற்பனை நடைபெற்றது. மதுக்கடைகள் முன்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தன. மேலும் மது வாங்க வரும் மது பிரியர்கள் முககவசம் அணிய வேண்டும் என்றும், ஒருவருக்கு ஒருவர் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று டாஸ்மாக் மேலாளர் வேடியப்பன், சேலம் டவுன் ரெயில் நிலையம் எதிரில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் முன்பு மது விற்பனை நடைபெறுவது குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது டாஸ்மாக் கடை ஊழியர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். மது விற்பனை செய்பவர்கள் கட்டாயம் கையுறை அணிந்து இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மதுக்கடை முன்பு கூட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் கடையில் 2 நபர்கள் மது விற்பனை செய்து கூட்டத்தை வேகமாக குறைக்க வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கினார்.

ரூ.20 கோடிக்கு மதுவிற்பனை

மேலும் சேலம் மாநகரில் உள்ள மதுக்கடைகளுக்கு குடோன்களில் இருந்து லாரிகள் மூலம் கூடுதல் மது பாட்டில்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அந்த மது பாட்டில்கள் கடைகளில் இறக்கி வைக்கும் பணியை டாஸ்மாக் மேலாளர் வேடியப்பன் ஆய்வு செய்தார். இது குறித்து அவர் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ரூ.10 கோடியே 11 லட்சத்துக்கும், நேற்று சுமார் ரூ.10 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளது என்றார்.

Next Story