நாகர்கோவிலில் செல்போன் கடையில் வாடிக்கையாளர்கள் திரண்டதால் பரபரப்பு கடையை அதிகாரிகள் இழுத்து மூடினர்


நாகர்கோவிலில் செல்போன் கடையில் வாடிக்கையாளர்கள் திரண்டதால் பரபரப்பு கடையை அதிகாரிகள் இழுத்து மூடினர்
x
தினத்தந்தி 11 May 2020 6:33 AM IST (Updated: 11 May 2020 6:33 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் செல்போன் கடையில் திரண்ட வாடிக்கையாளர்களால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த கடையை மாநகராட்சி அதிகாரிகள் இழுத்து மூடினர்.

நாகர்கோவில், 

நாகர்கோவிலில் செல்போன் கடையில் திரண்ட வாடிக்கையாளர்களால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த கடையை மாநகராட்சி அதிகாரிகள் இழுத்து மூடினர்.

இயல்பு நிலைக்கு திரும்பியது

ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டதின் விளைவாக 45 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் முதல் குளிர்சாதன வசதி அல்லாத அனைத்து தனிக்கடைகளும் திறக்கப்பட்டன. இதனால் குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், குழித்துறை, குளச்சல் போன்ற முக்கிய நகரங்கள் அனைத்திலும் மக்கள் கூட்டம் வெளியே அதிகமாக தென்பட்டது.

நாகர்கோவில் நகரின் முக்கிய சாலைகள் அனைத்திலும் நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் கணக்கிட முடியாத அளவில் இருந்தன. இதனால் குமரி மாவட்டத்தில் ஊரடங்குக்கு முந்தைய இயல்பு நிலை திரும்பியதை போன்று இருந்தது.

வணிக வளாகங்களில் கடைகள்

ஆனால் நேற்று நாகர்கோவில் நகரில் மக்கள் கூட்டமும், வாகன போக்குவரத்தும் சற்று குறைந்திருந்தது. வணிக வளாகங்களில் உள்ள கடைகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. அதையும் மீறி சில இடங்களில் கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. சில இடங்களில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படாமல் கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது.

நாகர்கோவிலில் தடை செய்யப்பட்ட டென்னிசன் தெரு அருகே உள்ள ஒரு வணிக வளாகத்தில் 10 கடைகள் திறக்கப்பட்டு இருந்தது. இதுபற்றிய தகவல் அறிந்த மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் பகவதியப்பன் பிள்ளை மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த கடைகளை உடனடியாக மூட உத்தரவிட்டனர். அதன்படி அந்த கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.

இழுத்து மூடப்பட்டது

நாகர்கோவில் மணிமேடை பகுதியில் உள்ள ஒரு செல்போன் கடையில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் மக்கள் அதிக அளவில் குவிந்திருந்தனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு நிலவியது. இதனை கவனித்த மாநகராட்சி அதிகாரிகள் அந்த கடையை இழுத்து மூடினர்.

இதேபோல் அப்பகுதியில் உள்ள மற்றொரு கடையிலும் வாடிக்கையாளர்கள் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது. அதிகாரிகள் குறிப்பிட்ட அளவில் தான் வாடிக்கையாளர்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று அந்த கடை நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினர். அவர்களும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களை தவிர மற்றவர்களை வெளியே அனுப்பினர்.

இதற்கிடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இறைச்சி கடைகளிலும் அதிக அளவில் கூட்டம் இருந்தது. இறைச்சி வாங்க வந்தவர்கள் சமூக இடைவெளியுடன் நின்று இறைச்சி வாங்கி சென்றனர்.

Next Story