கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள் - சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க கோரிக்கை


கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள் - சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 18 May 2020 11:15 PM GMT (Updated: 18 May 2020 6:21 PM GMT)

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வடமாநில தொழிலாளர்கள் பலர் குவிந்தனர். அப்போது அவர்கள், தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக ராணிப்பேட்டை, சிப்காட் உள்பட சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள தோல் தொழிற்சாலைகள், கட்டுமானப் பணிகள் ஆகியவற்றில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர். கொரோனா ஊரடங்கால் அவர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் சொந்த ஊருக்கும் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு வந்து, அங்குள்ள தோல் தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானப்பணிகளில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் 75 பேர் நேற்று திடீரென ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது வட மாநில தொழிலாளர்கள் கூறியதாவது:-

நாங்கள் வேலையின்றி உணவுக்கும் வழியில்லாமல் தவித்து வருகிறோம். சில நேரம் அம்மா உணவகத்தில் சாப்பிட்டு பசியை போக்கி வருகிறோம். எங்களை உடனடியாகச் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அரசின் விதிமுறைப்படி 15 நாட்களுக்கு முன்பே நாங்கள் எங்களுடைய சொந்த ஊருக்கு செல்ல விண்ணப்பித்தோம்.

ஆனால் அதிகாரிகள், 4 நாட்கள் ஆகும் என ஒரே வார்த்தையைத் தொடர்ந்து கூறி வருகிறார்கள். பல்வேறு வகைகளில் சிரமப்படும் எங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கலெக்டர் அலுவலக அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, “சொந்த ஊர்களுக்கு செல்ல விண்ணப்பித்துள்ள வடமாநில தொழிலாளர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப ரெயில் ஏற்பாடு செய்யப்பட்ட பிறகு அவர்களுக்கு தகவல் தெரிவித்து அனுப்பி வைக்கப்படுவார்கள்” என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story