மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோவையில், அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


மத்திய, மாநில அரசுகளை கண்டித்து  கோவையில், அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 May 2020 1:54 AM GMT (Updated: 20 May 2020 1:54 AM GMT)

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோவையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

கோவை,

கோவை மாவட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து அனைத்து தொழிற்சங்கத்தினர் நேற்றுக்காலை 11 மணியளவில் கலெக்டர் அலுவலகம் முன்பு கூடி பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் வி.ஆர்.பாலசுந்தரம்(ஐ.என்டி.யுசி.), எம்.ஆறுமுகம்(ஏ.ஐ.டி.யு.சி.), டி.எஸ்.ராஜாமணி(எச்.எம்.எஸ்.), மு.தியாகராஜன்(எம்.எல்.எப்.), கிருஷ்ணமூர்த்தி( சி.ஐ.டி.யு.), கே.எம்.தண்டபானி(எல்.பி.எப்.), மணி(ஏ.ஐ.சி.சி.டி.யு.), ஆர்.தாமோதரன்(எஸ்.டி.டி.யு.) மற்றும் சி.தங்கவேல், ரகுபு நிசார் ஆகியோர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

வேலைநேரம்

அதன்பின்னர் முன்னாள் எம்.எல்.ஏ. எம்.ஆறுமுகம்(ஏ.ஐ.டி.யு.சி.) நிருபர்களிடம் கூறியதாவது:-

சட்டப்படியான 8 மணி நேர வேலை உரிமையை பறிக்கும் வேலையில் மத்திய, மாநில அரசுகள் இறங்கியுள்ளன. தினமும் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்துவதற்கு அனைத்து தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வருங்கால வைப்பு நிதிக்கான பங்களிப்புத் தொகை 12 சதவீதமாக இருப்பதை 10 சதவீதமாக குறைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் 100 ஆண்டுகளாக போராடி பெற்ற தொழிலாளர் சட்டங்களை மத்திய அரசு சீரழிப்பது கண்டிக்கத்தகது. எனவே எங்கள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் வருகிற 22-ந் தேதி இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story