புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அனுப்பும் விவகாரம்; உத்தரபிரதேச முதல்-மந்திரிக்கு ராஜ்தாக்கரே பதிலடி


புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அனுப்பும் விவகாரம்; உத்தரபிரதேச முதல்-மந்திரிக்கு ராஜ்தாக்கரே பதிலடி
x
தினத்தந்தி 26 May 2020 5:38 AM IST (Updated: 26 May 2020 5:38 AM IST)
t-max-icont-min-icon

வெளிமாநிலங்களில் தவிக்கும் உத்தரபிரதேச தொழிலாளர்களை திருப்பி அனுப்பும் விவகாரத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே பதிலடி கொடுத்துள்ளார்.

மும்பை,

கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களில் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்பி வருகின்றனர்.

ஆனால் ஊரடங்கு நேரத்தில் உத்தரபிரதேச தொழிலாளர்களை பல்வேறு மாநிலங்கள் சரியாக கவனிக்கவில்லை என்றும், அவர்கள் தொழிலாளர்களை உத்தரபிரதேசத்திற்கு திரும்பி அனுப்ப விரும்பினால் தனது அரசாங்கத்திடம் அனுமதி கேட்க வேண்டும் என அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆவேசத்துடன் கூறினார்.

இதற்கு மண்ணின் மைந்தர் கொள்கையை தீவிரமாக கடைப்பிடித்து வரும் மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே பதிலடி கொடுத்து உள்ளார்.

அனுமதி பெற வேண்டும்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மராட்டிய அரசு இதுபோன்ற விஷயங்களை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். உத்தரபிரதேச தொழிலாளர்களை அங்கு திருப்பி அனுப்புவதற்கு தனது அரசிடம் அனுமதி பெற வேண்டும் என யோகி ஆதித்யநாத் கூறினால், இங்கு வேலை செய்ய வரும் அம்மாநில தொழிலாளர்கள் மராட்டிய அரசின் அனுமதியை பெற வேண்டும்.

இங்கு வேலைக்கு வரும் எந்தவொரு தொழிலாளியும் அரசாங்கத்திடமும், உள்ளூர் போலீசாரிடமும் முறையாக பதிவு செய்ய வேண்டும். தங்களது ஆவணங்களையும், புகைப்படங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். இதை மராட்டிய அரசு விடாமுயற்சியுடன் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story