மாவட்ட செய்திகள்

கோவையில் பரபரப்பு: 2 கோவில்கள் முன்பு இறைச்சியை வீசிய என்ஜினீயர் கைது சம்பவம் நடந்து 6 மணி நேரத்தில் போலீசார் நடவடிக்கை + "||" + In Coimbatore Engineer arrested for throwing meat at 2 temples

கோவையில் பரபரப்பு: 2 கோவில்கள் முன்பு இறைச்சியை வீசிய என்ஜினீயர் கைது சம்பவம் நடந்து 6 மணி நேரத்தில் போலீசார் நடவடிக்கை

கோவையில் பரபரப்பு: 2 கோவில்கள் முன்பு இறைச்சியை வீசிய என்ஜினீயர் கைது சம்பவம் நடந்து 6 மணி நேரத்தில் போலீசார் நடவடிக்கை
கோவையில், 2 கோவில்கள் முன்பு இறைச்சி வீசிய என்ஜினீயரை சம்பவம் நடந்த 6 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.
கோவை,

கோவையில் கோவில்கள் முன்பு இறைச்சி வீசிய சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை வைசியாள் வீதியில் வேணுகோபால கிருஷ்ணசாமி கோவில் உள்ளது. அந்த கோவிலையொட்டி ஒரு தனியார் கட்டிடம் உள்ளது. அதற்கு அருகில் ராகவேந்திரா சுவாமிகள் கோவில் உள்ளது. குறுகலான வீதியில் அமைந்துள்ள அந்த கோவில்களுக்கு அருகில் பழக்கடைகள், நகை பட்டறைகள் அதிகம் உள்ளன. அங்கு மக்கள் நடமாட்டம் எப்போதும் அதிகமாக காணப்படும்.


இந்த நிலையில் நேற்றுக்காலை 10.30 மணியளவில் ராகவேந்திர சுவாமிகள் கோவில் வாசலையொட்டி பேபி (வயது 65)என்ற பெண் பூ விற்றுக் கொண்டிருந்தார். அப்போது கோவில் அருகில் ஒரு ஆசாமி மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு கையில் ஒரு பையோடு வந்தார். அந்த கோவிலின் வெளிப்புறக் கதவு திறந்திருந்தது. உள் கதவு பூட்டப்பட்டிருந்தது. பூக்கடை அருகே வந்த அந்த ஆசாமி பூ வாங்காமல் வெளிப்புறக்கதவு திறந்திருந்த கோவில் முன்பு ஒரு பிளாஸ்டிக் பையை வைத்து விட்டு சென்றார்.

இறைச்சி வீச்சு

அதன்பின்னர் அந்த ஆசாமி நடந்து சென்று அருகில் இருந்த வேணுகோபால கிருஷ்ணசாமி கோவில் முன்பு மற்றொரு பிளாஸ்டிக் பையை வைத்து விட்டு தனது மோட்டார் சைக்கிளை நோக்கி நடந்து வந்தார். ராகவேந்திர சுவாமி கோவில் முன்பு அந்த ஆசாமி வைத்த பையிலிருந்து நாற்றம் வீசியதால் அது என்ன என்று பார்ப்பதற்காக பேபி எழுந்து சென்று அதை எடுத்து பார்த்தார். அதில் இறைச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார்.

அதற்குள் அந்த ஆசாமி மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டார். இது பற்றி அக்கம், பக்கத்தில் இருந்தவர்களிடம் பேபி கூறினார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சட்டம்-ஒழுங்கு போலீஸ் துணை கமிஷனர் பாலாஜி சரவணன் விரைந்து சென்று விசாரணை நடத்தினார். கோவில் முன்பு வைக்கப்பட்டிருந்த இறைச்சியை போலீசார் கைப்பற்றி விசாரணைக்காக எடுத்துச் சென்றனர். அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

போலீசார் வழக்குப்பதிவு

இந்த சம்பவம் குறித்து ராகவேந்திரசுவாமி கோவில் தலைவர் ரங்கநாதன், வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவில் செயல் அலுவலர் பூங்கொடி ஆகியோர் பெரிய கடைவீதி போலீசில் தனித் தனியாக புகார் மனு அளித்தனர். புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் பா.ஜனதா மற்றும் இந்துமுன்னணி உள்பட பல்வேறு இந்து அமைப்பினர் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இறைச்சி வீசப்பட்ட 2 கோவில்கள் மற்றும் அந்த பகுதியில் உள்ள கட்டிடங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு மர்ம ஆசாமியை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். இதற்காக சட்டம்-ஒழுங்கு போலீஸ் துணைகமிஷனர் பாலாஜி சரவணன் மேற்பார்வையில் 5 தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.

என்ஜினீயர் கைது

இதில் போலீசாருக்கு கைமேல் பலன் கிடைத்தது. பேபி சொன்ன தகவல்கள் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளில் ஒத்து போனதால் இறைச்சி வீசியவர் அடையாளம் தெரிந்தது. அவர் பெயர் ஹரி(வயது 48) என்று தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். நேற்றுக்காலை 10.30 மணிக்கு நடந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆசாமியை 6 மணி நேரத்தில் அதாவது 4.30 மணியளவில் கோவை மாநகர போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கைதான ஹரி கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர். சிவில் என்ஜினீயருக்கு படித்துள்ளார். தற்போது வேலையில்லாமல் உள்ளார். திருமணமாகி விட்டது. அவர் கவுண்டம்பாளையத்தில் இருந்து ஒரு கிலோ இறைச்சி வாங்கி வந்து இங்கு வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு அவருடைய வீடு அருகில் உள்ளவர்களுடன் அவர் தகராறு செய்துள்ளார். அவர் கோவில் முன்பு எதற்காக இறைச்சியை வைத்தார் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பூ விற்கும் பெண் சொன்ன அடையாளங்கள் மற்றும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளோடு ஒத்துப்போனதால் ஹரி அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். கைதான ஹரி மீது இந்திய தண்டனை சட்டம் 295ஏ(மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் செயல்படுதல்)உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கோவை: பிடிபட்ட சிறுத்தை ’டாப்சிலிப்’ வனப்பகுதியில் விடப்பட்டது - வீடியோ...!
கோவையில் பிடிபட்ட சிறுத்தை அடந்த வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது.
2. கோவையில் வனத் துறையினருக்கு போக்கு காட்டிய சிறுத்தை சிக்கியது- வீடியோ
கோவையில் வனத்துறையினருக்கு போக்கு காட்டிய சிறுத்தை கூண்டுக்குள் சிக்கியது.
3. கோவை: நகையில் போலி 916 முத்திரையிடும் ஆசாமிகள் பிடிபட்டனர் - நகைகள் பறிமுதல்
கோவை மாவட்டத்தில் நகையில் போலி 916 முத்திரையிடும் ஆசாமிகள் பிடிபட்டனர். அவர்களிடம் ரூ.11 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
4. கோவையில் வட மாநில வாலிபர் கட்டிவைத்து அடித்துக் கொலை
கோவையில் வட மாநில வாலிபர் கட்டிவைத்து அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
5. கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு - 2 பேர் கைது
கோவையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவத்தில் இந்து முன்னணியைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.