அரியலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வினியோகம் பெரம்பலூரில் 8-ந் தேதி வழங்கப்படுகிறது


அரியலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வினியோகம் பெரம்பலூரில் 8-ந் தேதி வழங்கப்படுகிறது
x
தினத்தந்தி 5 Jun 2020 11:26 AM IST (Updated: 5 Jun 2020 11:26 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் வருகிற 8-ந் தேதி வழங்கப்படவுள்ளது.

அரியலூர், 

அரியலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் வருகிற 8-ந் தேதி வழங்கப்படவுள்ளது.

10-ம் வகுப்பு தேர்வு

10-ம் வகுப்பு எனப்படும் எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வு தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ந் தேதி வரை நடைபெற இருந்தது. கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அறிவிக்கப்பட்டிருந்த 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா கட்டுக்குள் வராததால், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறுமா? என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் நிலவியது. அதன் பிறகு தமிழகத்தில் ஜூன் 1-ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டு, ஜூன் 15-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் அறிவித்தார்.

இந்நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஜூன் 4-ந் தேதி ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்றும், இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டோ, இணைய தளத்திலோ பதிவிறக்கம் செய்யலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது. ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பள்ளிகளில் 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் வினியோகிக்கப்படவில்லை.

ஹால் டிக்கெட் வினியோகம்

ஆனால் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகளின் ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து வைத்துள்ளனர். வருகிற 8-ந் தேதி முதல் அந்தந்த பள்ளிகளுக்கு மாணவ- மாணவிகள் வரவழைக்கப்பட்டு ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்றும், அன்றைய தினம் முக கவசம், கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை குறித்த ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளதாக கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அரியலூர் மாவட்டத்தில் பள்ளிகளில் நேற்று மாலை முதல் மாணவ- மாணவிகளுக்கு ஹால் டிக்கெட்டை தலைமை ஆசிரியர்களால் வினியோகிக்கப்பட்டது.

தேர்வு மையங்களில்

மேலும் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வினை அரசு திட்டமிட்டபடி நடத்துவதற்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் பள்ளிகளில் தேர்வு மையங்களை தயார் படுத்தி வருகின்றனர். மேலும் தேர்வு எழுத அறைகளில் தூய்மை பணியாளர்கள் தினமும் தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வினை பெரம்பலூர் மாவட்டத்தில் 141 பள்ளிகளை சேர்ந்த 4,589 மாணவர்களும், 4,027 மாணவிகளும் என மொத்தம் 8,616 பேர் எழுதவுள்ளனர். இதே போல் அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 10,527 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் வழிகாட்டுதலின் பேரில் செய்யப்பட்டு வருகிறது.

Next Story