கொரோனா தடுப்பு பணியில் கோவை மாவட்டம் முன்னணியில் உள்ளது எடப்பாடி பழனிசாமி பாராட்டு


கொரோனா தடுப்பு பணியில் கோவை மாவட்டம் முன்னணியில் உள்ளது எடப்பாடி பழனிசாமி பாராட்டு
x
தினத்தந்தி 26 Jun 2020 2:26 AM GMT (Updated: 26 Jun 2020 2:26 AM GMT)

கொரோனா தடுப்புப் பணியில் கோவை மாவட்டம் முன்னணியில் உள்ளது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

கோவை,

கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள், கொரோனா நோய் தொற்று தடுப்பு பணிகள் மற்றும் அத்திக்கடவு-அவினாசி நீரேற்றும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கோவை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது.

இதில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி, அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-

37 ஆயிரத்து 95 பேருக்கு பரிசோதனை

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் அரசின் வழிகாட்டுதலின்படி எந்த அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது என்ற விவரத்தை விரிவாக எடுத்துச்சொல்லி இருக்கிறார்கள். சென்னைக்கு அடுத்து கோவையில்தான் மருத்துவ சிகிச்சை அளிக்கும் விதத்தில் 2-வது இடத்தில் இருக்கிறது. அதிகமான ஆஸ்பத்திரிகள் இருக்கும் மாவட்டம் கோவைதான். உயர்தர சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவமனைகள் கொண்டதும் கோவை மாவட்டம்தான்.

அதன் அடிப்படையில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்காக 10 பரிசோதனை ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து இருக்கிறார்கள். தனியார் மற்றும் அரசு சார்பாக நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் பேர்களுக்கு பரிசோதனை செய்யப்படுவதாக கலெக்டர் ராஜாமணி தெரிவித்து இருக்கிறார். இதுவரை 37 ஆயிரத்து 95 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு, அதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் பூரண குணமடைவதற்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளித்து, தற்போது 219 பேர்தான் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்ற விவரத்தையும் சொல்லி இருக்கிறார்கள்.

கோவை மாவட்டம் முன்னணி

அதோடு அரசு மற்றும் தனியார் சார்பாக 3 ஆயிரத்து 26 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர். கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் கோவை மாவட்டம் முன்னணியில் இருப்பது தெளிவாக தெரிகிறது. மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கை காரணமாக கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது.

அதுபோல கோவை மாவட்டத்தில் நடைபெறும் திட்டங்கள், மேற்கொள்ளப்பட்ட பணிகள், மேற்கொள்ள இருக்கும் பணிகள் குறித்தும், மாநகராட்சி, பொதுப்பணித்துறை, குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் நடைபெறுகின்ற பணிகள் குறித்தும் விளக்கமாக எடுத்து சொன்னார்கள்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கோவை மாநகர மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்காக 3-வது குடிநீர் திட்டத்தை அமல்படுத்துவதற்காக முதற்கட்டமாக ரூ.166 கோடியில் பில்லூரில் சுரங்கப்பாதை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. இந்த திட்டம் 3 கட்டங்களாக பிரிக்கப்பட்டு, டெண்டர் விடுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு இருக்கிறது. நில எடுப்பு பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு குறித்த காலத்தில் கோவை மாநகர மக்களுக்கு நிலையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

எல்.இ.டி. விளக்குகளாக முழுவதும் மாற்றப்பட்டு உள்ளதாக தெரிவித்து இருக்கிறார்கள். இதனால் மின்தேவை குறைந்து இருக்கிறது. நெடுஞ்சாலைத்துறை மூலம் பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன. சேலத்தைவிட அதிகமான பாலப்பணிகள் கோவை மாவட்டத்தில் தான் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது என்பதை புள்ளி விவரங்களோடு நான் சொல்கிறேன். மேலும் கோவை மாநகரத்தில் அதிக நீளமுள்ள பாலங்கள் கட்டுவதற்கு விரைவில் டெண்டர் விடப்படும்.

அதிக பணிகள்

கோவை மாவட்டம் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக இருப்பதாலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை சுட்டிக்காட்டிய காரணத்தாலும், போக்குவரத்து நெரிசல் இல்லாத மாநகரமாக உருவாக்க வேண்டும் என்பதற்காக இவ்வளவு பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதுபோல நவீன பஸ் நிலையத்துக்கும் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

சேலம்-கோவை மாநகரத்துக்குள் அதிக வாகனங்கள் வருவதை தவிர்க்க மேற்கு புறவழிச்சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. தமிழகத்திலேயே அதிகமான பணிகள் நடைபெறும் மாவட்டம் கோவை என்பதை இந்த நேரத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

பொதுமக்களின் கோரிக்கைகள்

பொதுப்பணித்துறை, குடிநீர் வடிகால் வாரியம், மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, குடிசை மாற்றுவாரியம் என அனைத்து துறைகளிலும் பணிகள் சிறப்பாக நடைபெற்று கொண்டு இருக்கும் மாவட்டமும் கோவைதான் என்பதை பெருமையுடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். கோவை மாவட்டம் டெக்ஸ்டைல்ஸ், விவசாயம் என அனைத்து வளங்களும் நிறைந்த மாவட்டமாக இருக்கும் காரணத்தால் இங்கு அதிகமானவர்கள் பணிபுரிந்து கொண்டு இருக்கிறார்கள்.

இவ்வாறு அனைத்து வளங்களும் பெற்ற கோவை மாவட்டத்துக்கு அனைத்து துறைகளிலும் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கே உள்ள எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் வைக்கும் கோரிக்கைகள் முழுவதும் நிறைவேற்றுகிற வகையில் இந்த அரசு இருக்கிறது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

அதிக கல்லூரிகள்

கோவை மாவட்டத்துக்குத்தான் அதிகமான நிதி ஒதுக்கீடும் வழங்கப்பட்டு இருக்கிறது. அதிகமான கல்லூரிகள் அமைப்பதற்கான பணிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. அனைத்து வசதிகளும் கொண்ட ஒரு மாவட்டம் என்று சொன்னால் அது கோவைதான் என்பதையும் பெருமையோடு சொல்லிக்கொள்ள கடமைப்பட்டு உள்ளேன். உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறிப்பிட்டதைபோல் அனைத்து பணிகளும் தொடங்கப்பட்டு சிறப்பான முறையில் நடந்து கொண்டு இருக்கிறது.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. அரசு அறிவித்த திட்டங்கள் முழுவதும் சிறப்பான முறையில் நடைபெற்று இருக்கிறது. எனவே கோவை மாவட்ட நிர்வாகத்துக்கும், உள்ளாட்சித்துறை அமைச்சர், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து துறைகளை சார்ந்த அதிகாரிகளுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பில்லூர் 3-வது குடிநீர் திட்டம்

முன்னதாக கோவை மாவட்டத்தில் ரூ.166 கோடியில் பில்லூர் 3-ம் குடிநீர் அபிவிருத்தித்திட்டம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்கு முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார். அதுபோல் கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உக்கடத்தில் ரூ.39.74 கோடியில் பேரூர் சாலையினை ஒட்டியுள்ள பெரியகுளத்தின் வடபுற குளக்கரையின் புனரமைக்கப் பட்ட ஒரு பகுதி, வாலங்குளம் மேம்பாலத்தின் கீழ் ரூ.23.83 கோடியில் புனரமைக்கப்பட்ட ஒரு பகுதி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ரூ.2.68 கோடியில் அன்னூர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் ரூ.2.85 கோடியில் ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு புதிய கட்டிடம், ரூ.2.70 கோடியில் பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு புதிய கட்டிடம், மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூ.60 லட்சத்தில் செட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார மையம் கட்டிடம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

கூட்டத்தில் தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டசபை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், ஓ.கே.சின்னராஜ், வி.சி.ஆறுக்குட்டி, எட்டிமடை சண்முகம், கஸ்தூரிவாசு, வி.பி.கந்தசாமி, மாவட்ட ஊராட்சி தலைவர் சாந்திமதி, தொழில்துறை அரசு முதன்மை செயலாளர் என்.முருகானந்தம், பொதுப்பணித்துறை அரசு முதன்மை செயலாளர் கே.மணிவாசன், சிட்கோவின் மேலாண்மை இயக்குனர் கஜலெட்சுமி, கலெக்டர் ராஜாமணி, மாநகராட்சி தனி அதிகாரி ஷ்ரவன் குமார் ஜடாவத், மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண், மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா, கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி ராமதுரை முருகன், மாவட்ட திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், மாநகராட்சி துணை ஆணையாளர் மதுராந்தகி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story