ஆன்லைன் கல்வி தொடர்பான நிபுணர் குழு அறிக்கை: பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமாரிடம் தாக்கல்


ஆன்லைன் கல்வி தொடர்பான நிபுணர் குழு அறிக்கை: பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமாரிடம் தாக்கல்
x
தினத்தந்தி 8 July 2020 4:11 AM IST (Updated: 8 July 2020 4:11 AM IST)
t-max-icont-min-icon

ஆன்லைன் கல்வி தொடர்பான நிபுணர் குழு அறிக்கை பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமாரிடம் தாக்கல் செய்யப்பட்டது. தொழில்நுட்பத்தில் கற்பித்தலை மேற்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் கொரோன பரவி வருவதால், பள்ளி-கல்லூரிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளிகளில் குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலம் கல்வி கற்பிக்க அனுமதிப்பது தொடர்பாக கல்வித்துறை நிபுணர் ஸ்ரீதர் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை அமைத்து கர்நாடக அரசு உத்தரவிட்டது.

அதன்படி கல்வித்துறை நிபுணர் ஸ்ரீதர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர், பெங்களூருவில் பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமாரை நேற்று நேரில் சந்தித்து அறிக்கை வழங்கினர். தொழில்நுட்பத்தில் கற்பித்தலை மேற்கொள்ளலாம் என்று அந்த குழு பரிந்துரை செய்துள்ளது. அந்த அறிக்கையை பெற்றுக் கொண்ட பிறகு மந்திரி சுரேஷ்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் பள்ளிகளில் கற்றலை தொடர்ந்து மேற்கொள்வது தொடர்பாக நிபுணர் குழு குறைந்த நாட்களில் அறிக்கையை தயாரித்து வழங்கியிருப்பது பாராட்டுக்குரியது. சில பள்ளிகளில் ஆன்லைன் மூலம் கற்பித்தல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இன்னும் சில பள்ளிகள் ஆன்லைன் கல்வி என்ற பெயரில் கல்வி கட்டணத்தை வசூலிப்பதாக புகார்கள் வந்தன. இவற்றுக்கு தீர்வு காண வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு நிபுணர் குழுவை அமைத்தது. இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள அம்சங்களின் அடிப்படையில் ஆன்லைன் கல்விக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அமல்படுத்தப்படும்.

அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் கற்றலில் இருந்து பாதிக்கப்படாமல் இருக்க பயன்படுத்த வேண்டிய உபகரணங்கள் குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 3 முதல் 6 வயது உடைய குழந்தைகளுக்கு விளையாட்டு, கதை உள்பட நவீன முறையை பயன்படுத்தி நேரடியாகவோ அல்லது அச்சடிக்கப்பட்ட கற்பித்தல் மூலமாகவோ கற்பித்தலை மேற்கொள்ளலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வாரத்திற்கு 3 நாட்கள் தினசரி ஒரு துறை குறித்து கற்பிக்கலாம். அதே போல் 1 முதல் 2-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு கதை, விளையாட்டு மூலம் வாரத்தில் 3 நாட்கள் தினசரி 2 வேளையில் பாடங்களை நடத்தலாம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 3 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு வாரத்தில் 5 நாட்கள் தினசரி 30 நிமிடங்கள் வீதம் 2 வேளைகள் மூலம் கற்பிக்கலாம்.

6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 30 முதல் 45 நிமிடங்கள் வரை 3 வேளைகளில் பயிற்றுவிக்கலாம். 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 30 முதல் 45 நிமிடங்கள் வீதம் 4 வேளைகளில் பாடங்களை ஆன்லைனில் நடத்தலாம் என்று பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு தூர்தர்ஷன், ஆகாசவாணி மூலம் பாடம் கற்பித்தல் தொடங்கப்படும்.

பள்ளிகள் திறந்த பிறகும் இந்த தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட கல்வி தொடர்ந்து முன்னெடுத்து செல்லப்படும். இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள அம்சங்களை தீவிரமாக ஆராய்ந்து, ஆன்லைன் கல்விக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும்.

இவ்வாறு சுரேஷ்குமார் கூறினார்.

அதன் பிறகு நிபுணர் குழு தலைவர் ஸ்ரீதர் நிருபர்களிடம் கூறுகையில், “சமுதாயத்தில் அனைத்து தரப்பினரின் கருத்துகளை கேட்டு நாங்கள் இந்த அறிக்கையை வழங்கியுள்ளோம். கொரோனா நெருக்கடி காலத்தில் குழந்தைகளின் கற்றல் பாதிக்கப்படக்கூடாது, அவர்கள் தொடந்து கற்றலில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த அறிக்கையை நாங்கள் தயாரித்துள்ளோம் என்றார்.


Next Story