மாவட்டத்தில் 2,901 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு - கிராமங்களில் கொரோனா பரவுவதால் பொதுமக்கள் அச்சம்
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 2,901 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுகிறார்கள். இதற்கிடையே கிராமங்களில் கொரோனா பரவி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 118 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. இவர்களில் திருச்செங்கோட்டை சேர்ந்த லாரி டிரைவர் உயிரிழந்த நிலையில், 91 பேர் குணமாகி வீடு திரும்பிவிட்டனர். மீதமுள்ள 26 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே நகர்புறங்களில் மட்டுமே அதிகளவில் பாதிப்பு கண்டறியப்பட்டு வந்த நிலையில் தற்போது கிராமபுறங்களிலும் பரவலாக உறுதி செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
குறிப்பாக கடந்த ஒரு வார காலமாக எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
அண்டை மாவட்டங்களுக்கு பணிக்கு சென்று வரும் தொழிலாளர்கள் மூலம் ஒரு சில கிராமங்களில் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. நமது மாவட்டத்தை பொறுத்த வரையில் கொரோனா தாக்கம் கட்டுக்குள்தான் இருக்கிறது. சோதனை சாவடிகள் வழியாக வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது. இவ்வாறு பரிசோதனை செய்யப்படும் நபர்கள் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அந்த வகையில் நேற்று வரை 655 பேர் சிறப்பு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதேபோல் 2,246 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மொத்தமாக மாவட்டத்தில் 2,901 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
கிராமபுறங்களிலும் கொரோனாவின் தாக்கம் தென்படுவதால் வெளியே செல்லும் பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து செல்ல வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story