திருவாரூர் மாவட்டத்தில், ஒரே நாளில் டாக்டர் உள்பட 96 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 1,156 ஆக உயர்வு


திருவாரூர் மாவட்டத்தில், ஒரே நாளில் டாக்டர் உள்பட 96 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 1,156 ஆக உயர்வு
x
தினத்தந்தி 24 July 2020 10:30 PM GMT (Updated: 24 July 2020 11:44 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் டாக்டர் உள்பட 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,156 ஆக உயர்ந்துள்ளது.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1,060 பேர் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர்். இந்த நிலையில் நேற்று திருவாரூர் நகர் கீழவீதி பகுதியில் காய்கறி கடை நடத்தி வந்த ஒருவர், காட்டுக்கார தெருவை சேர்ந்த ஒருவர், ஐ.பி.கோவில் ஆத்தா குளம் பகுதியை சேர்ந்த ஒருவர் என 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து திருவாரூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) முத்துகுமரன் தலைமையில் துப்புரவு அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கிருமிநாசினி தெளித்தனர். மேலும் கீழவீதி, காட்டுக்கார தெரு, ஐ.பி.கோவில் தெரு ஆகிய 3 பகுதிகளும் முற்றிலும் அடைக்கப்பட்டது. ஏற்கனவே நோய் தொற்றினால் அங்காளம்மன் கோவில் தெரு அடைக்கப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதால் பொதுமக்கள் சற்று பீதியடைந்துள்ளனர்.

மேலும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணி புரிந்த டாக்டர் ஒருவர், குடவாசல் பகுதியை சேர்ந்த 4 வயது பெண் குழந்தை, வலங்கைமான் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகன் உள்பட 7 பேர், முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்த 3 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,156 ஆக உயர்ந்துள்ளது.


Next Story