மும்பை அருகே தொற்றுநோய் ஆஸ்பத்திரி அமைக்க உதவ வேண்டும் பிரதமரிடம் உத்தவ் தாக்கரே கோரிக்கை


மும்பை அருகே தொற்றுநோய் ஆஸ்பத்திரி அமைக்க உதவ வேண்டும் பிரதமரிடம் உத்தவ் தாக்கரே கோரிக்கை
x
தினத்தந்தி 27 July 2020 8:18 PM GMT (Updated: 27 July 2020 8:18 PM GMT)

மும்பை அருகே நிரந்தர தொற்றுநோய் ஆஸ்பத்திரி அமைக்க உதவி செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கோரிக்கை விடுத்தார்.

மும்பை,

நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மும்பை, கொல்கத்தா, நொய்டா ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள அதிவிரைவு கொரோனா பரிசோதனை மையங்களை நேற்று காணொலி காட்சி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மும்பை நகருக்கு அருகில் ஒரு நிரந்தர தொற்று நோய் மருத்துவமனையை அமைக்க விரும்புகிறேன். அங்கு மக்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவார்கள். அதே நேரத்தில் தொற்றுநோய் குறித்த ஆராய்ச்சியும் நடைபெறும். அதன் கட்டுமானத்திற்கு எனக்கு தங்களது ஆதரவும், உதவியும் தேவை.

கடைசி கட்டம் அல்ல

மராட்டியத்தில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றை சமாளிக்க செப்டம்பர் மாதத்துக்கு பிறகும் மத்திய அரசு முழுஉடல் பாதுகாப்பு கவசம் மற்றும் என்95 முககவசங்கள் வழங்க வேண்டும். தற்போதுள்ள விதிமுறைகளின்படி, இவை செப்டம்பர் வரை மட்டுமே மாநிலங்களுக்கு வழங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. நாம் கொரோனா வைரசுடன் வாழ முயற்சிக்கிறோம். ஆனால் இது கடைசி கட்டம் அல்ல. கடந்த 10 ஆண்டுகளாகவே வைரஸ் பரவலுக்கான அறிகுறி இருந்தது. ஆனால் நாம் அனைவரும் சுயநலமாகவே இருந்து விட்டோம்.

இதுபோன்ற எதிர்கால சவால்களை சமாளிக்க இப்போதே முன் ஏற்பாடுகளை செய்ய வேண்டிய நேரமிது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story