அரியலூரில் ஒரே நாளில் 89 பேருக்கு கொரோனா பெரம்பலூரில் 23 பேர் பாதிப்பு


அரியலூரில் ஒரே நாளில் 89 பேருக்கு கொரோனா பெரம்பலூரில் 23 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 30 Aug 2020 10:58 PM GMT (Updated: 30 Aug 2020 10:58 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 89 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூரில் 23 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே ஆயிரத்து 268 பேர் கொரோனா தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்தனர். இதில், குணம் அடைந்த ஆயிரத்து 84 பேர் குணமடைந்து வெவ்வேறு தேதிகளில் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுவரையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

மீதமுள்ள 144 பேர் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் உள்ள கொரோனா சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில், பெரம்பலூர் நகராட்சி பகுதியை சேர்ந்த 7 பேர், கிராமிய பகுதிகளான வசிஷ்டபுரம், திருவாலந்துறை, ஆண்டிக்குரும்பலூர், எஸ்.குடிகாடு, கொளக்காநத்தம், நாரணமங்கலம், எறையூர், ராமலிங்கபுரம், ஜமீன் ஆத்தூர், பிலிமிசை, மங்கலம், மேலஉசேன்நகரம், சிறுகுடல், வி.அகரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 16 பேர் என மொத்தம் 23 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.

மருத்துவமனைகளில் அனுமதி

இதைத்தொடர்ந்து, 23 பேரும் திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்ட கொரோனா சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன்மூலம், பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 291 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 89 பேருக்கு...

அரியலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் நேற்று 89 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 11 பேருக்கும், அரியலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 19 பேருக்கும், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 12 பேருக்கும், செந்துறை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 5 பேருக்கும், தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 14 பேருக்கும், ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 11 பேருக்கும், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 8 பேருக்கும், ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 9 பேருக்கும் என மொத்தம் 89 பேர் புதிதாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,670 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை சிகிச்சையில் குணமடைந்து 1,764 பேர் வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பலனின்றி 31 பேர் இறந்துள்ளனர். நேற்று மொத்தம் 419 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Next Story