ஆறுமுகநேரியில் கதவை உடைத்து துணிகரம்: என்ஜினீயர் வீட்டில் 36 பவுன் நகை கொள்ளை


ஆறுமுகநேரியில் கதவை உடைத்து துணிகரம்: என்ஜினீயர் வீட்டில் 36 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 8 Sept 2020 6:10 AM IST (Updated: 8 Sept 2020 6:10 AM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகநேரியில் என்ஜினீயர் வீட்டின் கதவை உடைத்து 36 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆறுமுகநேரி,

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி ஏ.ஐ.டி.யு.சி. காலனியைச் சேர்ந்தவர் சுதர்சன் செல்வபாபு (வயது 42). இவர் குவைத் நாட்டில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி தங்கம். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். தங்கம் தன்னுடைய மகள்களுடன் வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் சுதர்சன் செல்வபாபுவின் உறவினர் ஒருவர், காயல்பட்டினம் கோமான்புதூரில் இறந்து விட்டார். இதற்காக கடந்த 5-ந்தேதி தங்கம் தன்னுடைய மகள்களுடன் துக்க வீட்டுக்கு சென்றார். இதையடுத்து அவரது வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் கொள்ளையடிக்க திட்டமிட்டனர்.

36 பவுன் கொள்ளை

அதன்படி, மர்மநபர்கள் நள்ளிரவில் சுதர்சன் செல்வபாபுவின் வீட்டின் முன்பக்க இரும்பு கதவின் பூட்டை உடைத்து திறந்தனர். தொடர்ந்து அங்குள்ள மரக்கதவின் பூட்டையும் உடைத்து திறந்து உள்ளே நுழைந்தனர். பின்னர் வீட்டின் தரைத்தளத்தில் உள்ள பீரோவை திறந்து பார்த்தனர். அதில் துணிகள் இருந்தன.

தொடர்ந்து வீட்டின் மாடிக்கு சென்று, அங்குள்ள அறையின் கதவை உடைத்து திறந்து உள்ளே நுழைந்தனர். அங்கிருந்த பீரோவையும் உடைத்து திறந்து, அதில் இருந்த 36 பவுன் நகைகளை கொள்ளையடித்தனர்.

கண்காணிப்பு கேமரா

முன்னதாக சுதர்சன் செல்வபாபுவின் வீட்டில் 5 இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமராக்களையும் மேல்நோக்கி திருப்பி வைத்து விட்டு, கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டி உள்ளனர். மேலும், வீட்டில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகள் சேமித்து வைக்கப்படும் ஹார்டு டிஸ்கையும் கொள்ளையர்கள் திருடிச் சென்று விட்டனர்.

சுதர்சன் செல்வபாபுவின் செல்போனில் இருந்தே, அவரது வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை பார்க்கும் வசதி இருந்தது. நேற்று காலையில் அவர் தனது செல்போனில் இருந்தே, வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை பார்த்தபோது, அவை அனைத்தும் செயலிழந்து இருந்தது தெரியவந்தது. அவர் இதுகுறித்து தன்னுடைய மனைவிக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் விசாரணை

உடனே தங்கம் தனது வீட்டுக்கு விரைந்து சென்றார். அப்போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததையும், நகைகள் கொள்ளை போனதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத், ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வீட்டில் பதிவான தடயங்களை கைரேகை நிபுணர்கள் சேகரித்தனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.12 லட்சம் ஆகும்.

ஆசிரிய தம்பதி வீட்டில்...

இதேபோன்று சுதர்சன் செல்வபாபுவின் பக்கத்து வீட்டில் ஓய்வுபெற்ற ஆசிரிய தம்பதி வசித்து வருகின்றனர். இவர்கள் வெளியூரில் உள்ள தங்களது மகளின் வீட்டுக்கு சென்றனர். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் ஆசிரிய தம்பதியின் வீட்டிலும் புகுந்து, அங்கிருந்த எல்.இ.டி. டி.வி.யை திருடிச் சென்றனர். இதன் மதிப்பு சுமார் ரூ.25 ஆயிரம் ஆகும்.

இதுகுறித்த புகார்களின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அவர்களை பிடிப்பதற்காக போலீசார் 3 தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆறுமுகநேரியில் அடுத்தடுத்த 2 வீடுகளில் மர்மநபர்கள் புகுந்து கொள்ளையடித்து சென்ற துணிகர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story