தாராவியில் வீட்டின் மேற்கூரையை பிரித்து 20 பவுன் நகை கொள்ளை


தாராவியில் வீட்டின் மேற்கூரையை பிரித்து 20 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 9 Sept 2020 12:58 AM IST (Updated: 9 Sept 2020 12:58 AM IST)
t-max-icont-min-icon

தாராவியில் வீட்டின் மேற்கூரையை பிரித்து மர்மநபர்கள் 20 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

மும்பை,

மும்பை தாராவி போலீஸ் நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சாலை சேர்ந்தவர் தர்மலிங்கம்(வயது70). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் குடும்பத்தினருடன் டோம்பிவிலியில் உள்ள மூத்த மகளின் வீட்டுக்கு சென்றார்.

அவரது வீட்டுக்கு கீழ் பகுதியில் இளைய மகள் மீனா மட்டும் இருந்தார். கடந்த சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் மீனா தனது வீட்டுக்கு மேலே உள்ள தந்தை வீட்டுக்கு சென்றார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

20 பவுன் நகை கொள்ளை

சந்தேகமடைந்த அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோ திறந்து கிடந்தது. மேலும் வீட்டில் இருந்த 20 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கொள்ளையர்கள் வீட்டின் மேற்கூரையை பிரித்து உள்ளே வந்து உள்ளனர். பின்னர் அவர்கள் கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு வீட்டில் இருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்று உள்ளனர்.

புகாரின்பேரில் தாராவி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். மேலும் கொள்ளையர்களை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாராவியில் வீட்டின் மேற்கூரையை பிரித்து 20 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story