தெருவோர வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்க ஆணை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்


தெருவோர வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்க ஆணை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்
x
தினத்தந்தி 15 Sep 2020 11:30 PM GMT (Updated: 15 Sep 2020 11:30 PM GMT)

தெருவோர வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்குவதற்கான ஆணையை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்.

புதுச்சேரி,

தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்பொருட்டு இந்திய அரசால் தெருவோர வியாபாரிகள் சட்டம்-2014 கொண்டு வரப்பட்டது. இதைத்தொடர்ந்து புதுச்சேரி அரசால் தெருவோர வியாபாரிகளுக்கான (வாழ்வாதார பாதுகாப்பு கட்டுப்பாடுகள் மற்றும் உரிமம்) திட்டம்-2020 அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டம் வியாபாரம் செய்யும் தெருவோர வியாபாரிகளை வரைமுறைப்படுத்தவும், அங்கீகாரம் வழங்கவும் வழி வகை செய்கிறது. இதையொட்டி புதுவையில் வியாபாரம் செய்வதற்கான சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்குதல் மேலும் பிரதம மந்திரியின் தெருவோர வியாபாரிகளுக்கான சுயசார்பு நிதி திட்டத்தின்கீழ் ரூ.10 ஆயிரம் வட்டி மானியத்துடன் கூடிய கடனுதவிக்கான ஒப்புதல் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

உழவர்கரை நகராட்சி அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு ஆணையர் கந்தசாமி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் நமச்சிவாயம் கலந்துகொண்டு அடையாள அட்டை, கடனுதவிக்கான வங்கியின் ஒப்புதல் ஆணையை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஏ.ஐ.டி.யு.சி. பொதுச்செயலாளர் சேதுசெல்வம் உள்பட தெருவோர வியாபாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Next Story