நான்கு வழிச்சாலை பணிக்காக பாசன கால்வாய்கள் சேதப்படுத்துவதை கண்டித்து விவசாயிகள் போராட்டம்
மேலூர்-காரைக்குடி நான்கு வழிச்சாலை பணிக்காக பாசன கால்வாய்கள் சேதப்படுத்துவதை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலூர்,
மேலூரில் இருந்து காரைக்குடி வரையில் ரூ.680 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. மேலூர் அருகே தனியாமங்கலம், சருகுவலையபட்டி, வடக்குவலையபட்டி உள்ளிட்ட பகுதிகளில் நான்கு வழிச்சாலை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அந்த பகுதியில் விவசாய நிலங்களுக்கு செல்லும் பாசன கால்வாய்கள் மூடப்பட்டு நீர்வழி பாதைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனை கண்டித்தும் அந்த இடத்தில் பாலம் அமைக்க கோரிக்கை விடுத்தும் சாலை அமைக்கும் பணிகளை தடுத்து விவசாயிகள் நேற்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியாறு-வைகை கடைமடை பாசன பகுதியான இங்கு நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வரும் கால்வாய்கள் உள்ளிட்ட நீர்வழிப்பாதைகள் சேதப்படுத்த கூடாது என விவசாயிகள் கோஷமிட்டு அங்கிருந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நான்கு வழிச் சாலை திட்டத்தை ஆதரிப்பதாகவும், அதேசமயம் விவசாயம் பாதிக்காத வகையில் பணிகள் நடைபெற வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தனர். பின்னர் அங்குவந்த கீழவளவு போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியை தொடர்ந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story