பெங்களூருவில் சட்டவிரோதமாக தங்கி இருந்து போதைப்பொருள் விற்ற ஆப்பிரிக்காவை சேர்ந்த வாலிபர் கைது - விருந்து நிகழ்ச்சிகளுக்கு சப்ளை செய்ததும் அம்பலம்


பெங்களூருவில் சட்டவிரோதமாக தங்கி இருந்து போதைப்பொருள் விற்ற ஆப்பிரிக்காவை சேர்ந்த வாலிபர் கைது - விருந்து நிகழ்ச்சிகளுக்கு சப்ளை செய்ததும் அம்பலம்
x
தினத்தந்தி 16 Sep 2020 10:12 PM GMT (Updated: 16 Sep 2020 10:12 PM GMT)

பெங்களூருவில், சட்டவிரோதமாக தங்கி இருந்து போதைப்பொருள் விற்று வந்த ஆப்பிரிக்காவை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் விருந்து நிகழ்ச்சிகளுக்கு போதைப்பொருட்களை சப்ளை செய்தது அம்பலமாகி உள்ளது.

பெங்களூரு,

கன்னட திரை உலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்தியது மற்றும் பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை செய்த விவகாரம் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி மற்றும் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். அதே நேரத்தில் போதைப்பொருள் விவகாரத்தில் மேலும் பல விற்பனையாளர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வந்தனர்.

இந்த நிலையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் தங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த வாலிபரை நேற்று கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர் ஆப்பிரிக்காவை சேர்ந்த பினால்டு உடன்னா (வயது 34) என்று தெரிந்தது. இவர், பெங்களூருவில் சட்டவிரோதமாக தங்கி இருந்து போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

மேலும் கன்னட திரை உலகினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட விருந்து நிகழ்ச்சிகளுக்கு பினால்டு போதைப்பொருட்களை சப்ளை செய்து வந்திருக்கிறார். ஏற்கனவே கைதாகி உள்ள ரவிசங்கர், ராகுல், வீரேன் கண்ணா, ஆப்பிரிக்காவை சேர்ந்த லோயம் பெப்பர் சம்பா ஆகியோர் கொடுத்த தகவல்களின் பேரில் பினால்டு போலீசாரிடம் சிக்கி இருந்தார். கைதான பினால்டுவிடம் இருந்து 12 கிராம் கொகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பினால்டுவை போலீஸ் காவலில் எடுத்து, அவர் கன்னட திரை உலகினர் யாருக்கு எல்லாம் போதைப்பொருட்கள் சப்ளை செய்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் நிருபர்களிடம் கூறுகையில், விருந்து நிகழ்ச்சிகளுக்கு போதைப்பொருட்கள் சப்ளை செய்தவர்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், பிளாக்கி, கோக், ஜான் ஆகிய 3 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, பினால்டு உடன்னா கைது செய்யப்பட்டுள்ளார். இவர், தான் பிளாக்கி, கோக், ஜான் ஆகிய 3 பெயர்களில் போதைப்பொருட்களை விற்று வந்தது தெரியவந்தது. அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறோம், என்றார்.

Next Story