போதைப்பொருள் விவகாரத்தில் கைது: போலீஸ் காவல் முடிவடைந்ததை தொடர்ந்து நடிகை சஞ்சனா சிறையில் அடைப்பு - ஜாமீன் மனு மீது நாளை விசாரணை


போதைப்பொருள் விவகாரத்தில் கைது: போலீஸ் காவல் முடிவடைந்ததை தொடர்ந்து நடிகை சஞ்சனா சிறையில் அடைப்பு - ஜாமீன் மனு மீது நாளை விசாரணை
x
தினத்தந்தி 17 Sept 2020 4:24 AM IST (Updated: 17 Sept 2020 4:24 AM IST)
t-max-icont-min-icon

போதைப்பொருள் விவகாரத்தில் கைதான நடிகை சஞ்சனா கல்ராணியின் போலீஸ் காவல் நேற்று நிறைவடைந்தது. இதையடுத்து அவர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். இவரது ஜாமீன் மனு நாளை (வெள்ளிக் கிழமை) கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.

பெங்களூரு,

கன்னட திரை உலகினர் விருந்து நிகழ்ச்சிகளில் போதைப்பொருட்கள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் விருந்து நிகழ்ச்சிகளில் நடிகர், நடிகைகள் போதைப்பொருட்கள் பயன்படுத்தியதாக இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ், சமூக ஆர்வலர் பிரசாந்த் சம்பரகி குற்றச்சாட்டு கூறி இருந்தனர். இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் நடிகை ராகிணி திவேதி, அவரது நண்பர் ரவிசங்கர், நடிகை சஞ்சனா கல்ராணி, அவரது நண்பர் ராகுல், போதைப்பொருள் விற்பனையாளர்களான லோயம் பெப்பர் சம்பா, பிரசாந்த் ரங்கா, ஆதித்யா அகர்வால், வீரேன் கண்ணா, வைபவ் ஜெயின், நயாஸ், பிரதிக் ஷெட்டி ஆகிய 11 பேரை கைது செய்துள்ளனர். இவர்களில் நடிகை ராகிணி திவேதி, பிரசாந்த் ரங்கா, லோயம் பெப்பர் சம்பா, ராகுல், நயாஸ் ஆகிய 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நடிகை சஞ்சனா கல்ராணி, ரவிசங்கர், வீரேன் கண்ணா உள்பட 6 பேரையும் போலீசார் தங்களது காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். நடிகை சஞ்சனா கல்ராணியிடம் சித்தாபுரா அருகே உள்ள மகளிர் பாதுகாப்பு மையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. கடந்த 8-ந் தேதி கைதான சஞ்சனா கல்ராணியை முதலில் 5 நாட்களும், பின்னர் 3 நாட்களும் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் போது, சஞ்சனா கல்ராணி விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு போதைப்பொருள் பயன்படுத்தியது பற்றிய முக்கிய தகவல்கள் போலீசாருக்கு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டவர்களான ராகுல், வைபவ் ஜெயின் மற்றும் சிலருடன் சஞ்சனா கல்ராணிக்கு தொடர்பு இருப்பது பற்றிய தகவல்களும் கிடைத்திருந்தது. அத்துடன் அவர் போதைப்பொருட்கள் பயன்படுத்தி உள்ளாரா? என்பது கண்டறிய, அவரது தலை முடி, ரத்த மாதிரி ஐதராபாத்தில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், நடிகை சஞ்சனா கல்ராணியின் போலீஸ் காவல் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து, மல்லேசுவரம் அரசு ஆஸ்பத்திரியில் சஞ்சனா கல்ராணிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

பின்னர் நேற்று மதியம் பெங்களூரு 1-வது கூடுதல் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி ஜெகதீஷ் முன்னிலையில் நடிகை சஞ்சனா கல்ராணியை காணொலி காட்சி மூலமாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அப்போது சஞ்சனா கல்ராணியை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முன்வரவில்லை. அதே நேரத்தில் அவருக்கு ஜாமீன் வழங்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் சஞ்சனா கல்ராணி தரப்பில் வக்கீல் சீனிவாஸ் ஆஜராகி வாதாடினார்.

அவர் வாதாடுகையில், சஞ்சனா கல்ராணியை கைது செய்து 2 முறை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். ஆனால் அவர் மீது எந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை குறிப்பிடவில்லை. எனவே நடிகை சஞ்சனா கல்ராணிக்கு ஜாமீன் வழங்க வேண்டும். ஏனெனில் அவர் மீது எந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை குறிப்பிடாததால், போதைப்பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டு தான் ஜாமீன் வழங்க வேண்டும் என்ற விதி இல்லை, இந்த கோர்ட்டே ஜாமீன் வழங்கலாம், என்றார்.

சஞ்சனா கல்ராணிக்கு ஜாமீன் வழங்குவதில் குழப்பம் நிலவியதாலும், போதைப்பொருள் விவகாரம் தொடர்பான விசாரணை சிறப்பு கோர்ட்டில் தான் விசாரிக்கப்பட வேண்டும் என்பதால், இந்த வழக்கு தொடர்பான அனைத்து விசாரணையும் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றி நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அத்துடன் நடிகை சஞ்சனா கல்ராணிக்கு வருகிற 18-ந் தேதி வரை(அதாவது நாளை) மட்டும் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டார். அதே நேரத்தில் இந்த வழக்கில் ஏற்கனவே கைதான ரவிசங்கர், வீரேன் கண்ணா ஆகிய 2 பேருக்கும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஏற்கனவே நேற்று காலையில் சிறப்பு கோர்ட்டில் சஞ்சனா கல்ராணி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டு இருந்த ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த வழக்கின் விசாரணை சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளதால், வருகிற 18-ந் தேதி சஞ்சனா கல்ராணியின் ஜாமீன் மனு மீது விசாரணை நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், சஞ்சனா கல்ராணிக்கு 18-ந் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து நேற்று இரவு சித்தாபுரா மகளிர் பாதுகாப்பு மையத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பரப்பனஅக்ரஹாரா சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே நடிகை ராகிணி திவேதியும் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். அவருடன் சேர்ந்து தற்போது நடிகை சஞ்சனா கல்ராணியும் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.

இதுபோல, வீரேன் கண்ணா, ரவிசங்கரும் சிறையில் அடைக்கப்பட்டார்கள். போதைப்பொருள் விவகாரத்தில் 2 நடிகைகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவத்தால் கன்னட திரை உலகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story